ஜோகூர் பாரு, ஏப்ரல் 19 – கத்தியுடன் இங்குள்ள வங்கிக் கிளைக்குள் நுழைந்த பாதுகாவலர் ஒருவர் அங்கிருந்த அதிகாரியை குத்திக் கொன்ற சம்பவம் ஜோகூர் பாருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை மதியம், தாமான் மோலேக்கில் உள்ள எச்எஸ்பிசி வங்கிக் கிளையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் பெண் அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.
33 வயதான, ஹோ சின் தாவ் என்ற அந்த வங்கி அதிகாரிக்கு முகத்திலும் கழுத்திலும் கத்திக்குத்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இதையடுத்து 50 வயதைக் கடந்த பெண் அதிகாரியை அந்தப் பாதுகாவலர் தாக்கினார். இதில் அந்தப் பெண்ணுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலிசார் அந்த வங்கிக்கு விரைந்து சென்று 44 வயதுள்ள அந்த ஆடவரை கைது செய்தனர். அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
“வங்கி அதிகாரிகள் இருவர் தாக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. வங்கிக் கிளையில் உள்ள கண்காணிப்பு படக் கருவிகளில் (கேமராக்கள்) பதிவாகியுள்ள காட்சிகளை விசாரணைக்குப் பயன்படுத்த உள்ளோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் அதிகாரியின் உடல்நிலை தேறி வருகிறது” என்று ஸ்ரீ ஆலாம் காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் அப்துல் சமாட் தெரிவித்துள்ளார்.
தந்தையாகக் காத்திருந்த வங்கி அதிகாரி
இந்த சம்பவத்தில் உயிரிழந்த வங்கி அதிகாரி ஹோ சின் தாவ் திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக குழந்தையில்லாமல் தற்போது அவரது மனைவி ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கின்றார்.
தந்தையாக தனது வாரிசைக் கையிலெடுத்துக் கொஞ்சக் காத்திருந்த ஹோ சின் அந்த மகிழ்ச்சித் தருணத்தை அனுபவிக்காமலேயே உயிரிழந்திருக்கும் சோக சம்பவமாக இது அமைந்துவிட்டது.
அவரது இழப்பால் நொறுங்கிப் போயிருக்கும் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல நேற்று ஜோகூர் மாநில காவல் துறைத் தலைவர் கமிஷனர் டத்தோஸ்ரீ முகமட் மொக்தார் முகமட் ஷாரிஃப் (படம்) அவர்களின் இல்லத்திற்கு நேரடியாக வருகை தந்தார்.