Home இந்தியா இன்று அட்சய திரிதியை முன்னிட்டு தமிழகத்தில் 2,400 கிலோ தங்கம் விற்பனை!

இன்று அட்சய திரிதியை முன்னிட்டு தமிழகத்தில் 2,400 கிலோ தங்கம் விற்பனை!

576
0
SHARE
Ad

goldசென்னை, ஏப்ரல் 21 – அட்சய திரிதியையான இன்று தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்று மட்டும் 2,400 கிலோ தங்கம்  விற்பனையாகியுள்ளது என்று நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3-வது திரிதியையான வளர்பிறை திரிதியை ‘அட்சய  திரிதியை’ என்று அழைக்கப்படுகிறது. ‘அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். இந்த நாள் நல்ல  அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை  மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

அட்சய திரிதியை அன்று சிறிய குண்டுமணி அளவு தங்க நகை  வாங்கினால் கூட அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்போடு வாழலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது.

அட்சய திரிதியையான இன்று பெரும்பாலான இடங்களில் அதிகாலையிலேயே நகைக்கடைகள் திறக்கப்பட்டன. அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி  வழிந்தது. செய்கூலி இல்லை, சேதாரத்தில் சிறப்பு தள்ளுபடி என வாடிக்கையாளர்களை கவர நகைக்கடைகள் போட்டி போட்டு கவர்ச்சி அறிவிப்புகளை  வெளியிட்டன.

இன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சில நாட்களுக்கு முன்பே, பொது மக்கள், கடைகளுக்கு சென்று, தாங்கள் விரும்பிய நகைகளை  தேர்வு செய்து, பணத்தை செலுத்தி, முன்பதிவு செய்து, ரசீது பெற்று வைத்திருந்தனர். இந்த ரசீதை இன்று கடையில் கொடுத்து, நகைகளை பெற்று கொண்டனர்.

பலர் பல தங்க நகைகளை கொடுத்து புதிதாக மாற்றிக் கொண்டனர். இன்று மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 2,400 கிலோ தங்க நகைகள் விற்பனையாகியுள்ளது. நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கிய  அட்சய திரிதியை இன்று இரவு 9 மணி வரை  நீடிக்குமாம்.