கோலாலம்பூர், ஏப்ரல் 24 – பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து விலக்க திட்டமிடுவதாக அம்னோ இளைஞர் பிரிவைச் சேர்ந்த 5 தலைவர்கள் குறித்து இணையத்தில் வெளியான தகவல் பொய் என்பது சம்பந்தப்பட்டவர்களால் ஒரு மணி நேரத்தில் நிரூபிக்கப்பட்டது.
இத்தகவல் வெளியான உடனேயே தங்களது நிலைப்பாட்டை சமூகவலைதளங்களில் அவர்கள் ஐவரும் பதிவிட்டனர்.
“அப்படி ஒரு தகவல் பொறுப்பற்ற, மனசாட்சியற்ற ஒரு வலைப்பக்கத்தில் வெளியானதை அறிந்த ஒரு மணி நேரத்திலேயே எங்களது கண்டனத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்தோம். எங்களிடம் அப்படி ஒரு திட்டம் இல்லை என்று தெரிவித்தோம்.
“பிரதமருக்கும் அம்னோ இளைஞர் பிரிவுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எந்தவொரு சந்திப்பும் நிகழவில்லை,” என்று அம்னோ மத்திய செயலவை உறுப்பினரான இப்டில்லா இஷாக் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள் தங்களுக்கெதிராக வெளியாகும் திரித்து விடப்படும் செய்திகளையும் விமர்சனங்களையும் எதிர்த்து போராட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், முன்பெல்லாம் இவற்றுக்கு பதிலளிக்க ஒரு நாள் அவகாசமேனும் இருந்ததாக தெரிவித்தார்.
“இப்போதோ சில மணி நேரங்கள் அல்லது நிமிடங்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் நமது பதிலை தெரிவித்தாக வேண்டும். இல்லையேல் யாரேனும் திரித்துவிடுவர்,” என்று இப்டில்லா இஷாக் மேலும் கூறியுள்ளார்.