ஐதராபாத், ஏப்ரல் 29 – நில அபகரிப்பு புகார் தொடர்பான வழக்கில் ‘ரிலையன்ஸ்’ குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் சக்கா துர்கம்பா. இவருக்கு காக்கிநாடாவில் 8.23 ஏக்கர் நிலம் உள்ளது. சக்கா துர்கம்பா ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
“எனக்கு சொந்தமாக காக்கிநாடாவில் உள்ள நிலத்தை முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ்’ நிறுவன பிரதிநிதிகள் தவறான ஆவணங்கள் தயாரித்து அபகரித்து கொண்டனர்”.
“இதுகுறித்து போலீசில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்காததால் காக்கிநாடா முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு கொடுத்தேன். ஆனால் எனது மனுவை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது”.
“இதனால் எனது மனுவை ஏற்று விசாரித்து எனக்கு நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என சக்கா துர்கம்பா கூறியிருந்தார். இம் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி துர்க்கா பிரசாத்ராவ் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு,
முகேஷ் அம்பானி மற்றும் ‘ரிலையன்ஸ்’ நிறுவன பிரதிநிதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கில் அடுத்த விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.