நேப்பாளத்தில் இதற்கு முன்பு பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், தற்போது உலகின் மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் அருகே நிலநடுக்கம் உருவாகியுள்ளது. பூமியின் மிகப்பெரிய 2 ராட்சத நிலத்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று அதிவேகமாக மோதி கொண்டதால் ஏற்பட்டதாகும்.
இது 80 ஆண்டுகளில் ஏற்கனவே உருவான நிலநடுக்கங்களை விட மிகப்பெரியதாகும். இந்த நிலநடுக்கம் 20 அணுகுண்டுகள் வெடித்ததற்கு சமம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜப்பானின் ஹிரோசிமா நகரில் வீசிய அணுகுண்டை விட சக்தி வாய்ந்ததாக இது கருதப்படுகிறது.
நிலநடுக்கம் குறித்து ஆரம்ப கட்ட ஆய்வில் இந்த பயங்கர நிலநடுக்கத்தால் நேப்பாளத்தின் தலைநகர் தெற்கே 3 மீட்டர் (10 அடி) இடம் பெயர்ந்துள்ளதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புவியமைப்பு நிபுணர் ஜேம்ஸ் ஜாக்சன் கூறியுள்ளார்.
அப்போது எவரெஸ்ட் சிகரத்தின் அளவு 2.8 சென்ட்டிமீட்டர் குறைந்துள்ளதை செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் தகவலை விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை இன்னும் சில வாரங்களில் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தலைநகர் காத்மண்டு அருகே 120 கி.மீ. நீளமும், 50 கி.மீ. அகலமும் உள்ள இடம் 1 மீட்டர் உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் காத்மண்டுவில் இருந்து 83 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.