Home நாடு மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு வெற்றியைத் தந்த ‘சீதா தேவி’ மலாய் நாடகம்!

மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு வெற்றியைத் தந்த ‘சீதா தேவி’ மலாய் நாடகம்!

901
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 24 – மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கென தேசிய அளவில் நடத்தப்படும் மலாய் நாடகப் போட்டியில் நேற்று ஜோகூர் மாநிலத்தின் மாசாய் தமிழ்ப் பள்ளி முதல் பரிசைத் தட்டிச் சென்றது.

Masai Tamil School getting 1st prize Malay drama

பயிற்சி தந்த ஆசிரியர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகின்றது – வலது கோடியில் நாடகாசிரியர் எஸ்.டி.பாலா

#TamilSchoolmychoice

“சீதா தேவி” (Sita Dewi Puteri Purwo) எனும் தலைப்பிலான இந்த நாடகம் இந்த நாடகப் போட்டிக்காகவே உருவாக்கப்பட்டதாகும். சுமார் ஒரு மாத காலப் பயிற்சிக்குப் பின்னர் மாணவர்கள் இச்சிறப்பான படைப்பைப் படைத்தனர்.

நமது நாட்டின் பிரபல நாடகாசிரியர் எஸ்.டி. பாலா (Fenomena Seni Pentas, Persatuan Seni Pentas India, KL)  தலைமையில் ஒவ்வொரு வருடமும் இம்மாதிரியான போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் பல மாணவர்களின் கலைத் திறமையும் இலை மறைவில் உள்ளவர்களின் ஆற்றல்களும் வளர்க்கப்பட்டுள்ளன.

Masai Tamil School Malay Drama 10

நாடகத்தில் நடித்த மாணவர்களுடன் நாடகத் தயாரிப்பாளர்கள், பரிசு பெற்ற பின்னர்…

ஒவ்வொரு வருடமும் மாசாய்  தமிழ்ப்பள்ளி மாணவர்கள் குழு இப்போட்டியில் கலந்து சாதனைப் படைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய மொழியிலேயே படைக்கப்பட்ட இந்த நாடகத்தில் வசந்த் இரமேஸ், விஷால் இராஜேந்திரன், லீனா பசுப்பதி, நவீன் குமார் இரமேஸ், நர்மதா மோகன், விகாஷினி சந்தரா, ஹரிப்பிரியா அன்பழகன், இஸ்கந்தார் ஷா, யுவாஸ்ரீ கண்ணையா, திவ்யாஷினி சரவணன் ஆகியோர் தங்களது அபார நடிப்பினால் வருகையாளர்களை அதிகம் கவர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Masai Tamil School Malay Drama -1

நாடகத்தில் இடம் பெற்ற ஒரு  காட்சி 

இந்நாடகம் இராமாயணத்தில் இடம் பெற்ற சில காட்சிகளைச் சித்தரித்தது. இந்நாடகம் சற்று வித்தியாசமான முறையில்  ஜோகூர் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் ஜாவா மொழி கலந்த மலாய் நாடகமாகப் படைக்கப்பட்டது. நாடகமும், நடனமும் இசையுடன் கலந்து படைத்து வருகை புரிந்தவர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டனர் நாடகப் பாத்திரங்களேற்று நடித்த மாணவர் செல்வங்கள்.

அதுமட்டுமின்றி ஆரம்பப்பள்ளி மாணவர்களான இந்த இளஞ்சிட்டுகள் பல வகையான மன உணர்வுகளை முக பாவமாகக் காட்டியது பார்வையாளர்களின் ஒட்டுமொத்த பார்வையையும் சுண்டி இழுத்தது.

முதல் இடத்தில் மாசாய்

இந்த ஆண்டுக்கான போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளி, முதல் இடத்தில் வாகை சூடியது. வெற்றி பெற்ற இக்குழுவிற்கு 5,000 வெள்ளி ரொக்கமும், சுழற்கிண்ணம் உட்பட நற்சான்றிதழ்களும்வழங்கப்பட்டன.

Masai Tamil School Malay Drama 2

மேலும் இப்பள்ளி மாணவன் விஷால் இராஜேந்திரனுக்கு சிறந்த நடிகனுக்கான விருதும் 500 வெள்ளி ரொக்கமும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காஜாங் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்திலும், உலு ரெமிஸ் தமிழ்ப்பள்ளி மூன்றாவது இடத்திலும் வெற்றி பெற்றன.

மாசாய் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நாடகப் போட்டி சாதனைகளுக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஸ்ரீதரன் மற்றும் துணைத்தலைமை ஆசிரியர்கள், திருமதி இராஜம்மாள், திருமதி இராஜேஸ்வரி, திரு சிவசுப்ரமணியம், திருமதி ஏ எஸ் விஜயா ஆகியோரின் வற்றாத ஊக்கமும் முன்னோக்குச் சிந்தனைகளும்தான் முக்கிய காரணங்களாகும். இவர்களின் தன்னலமற்ற ஆசிரியர் பணிகளும், சேவை மனப்பான்மையும்தான பல மாணவர்களை சாதனை நட்சத்திரங்களாக உருவாக்கத் துணைப் புரிந்துள்ளது.

Masai Tamil School -3

மேலும் இந்நாடகத்தை பயிற்றுவித்த ஆசிரியர்கள் திருமதி கஸ்தூரி, திருமதி சித்தி ஆய்ஷா, திரு கணேஷ், பயிற்றுனர் திரு ஓஸ்மான் (Othman) , மலாய் மொழி பாடக்குழு ஆசிரியர்கள், மாசாய் தமிழ்ப்பள்ளி அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாசாய் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரிய சங்க செயலவை உறுப்பினர்கள், ஜொகூர் ஸ்ரீ முருகன் நிலையம் (திரு பாஸ்கரன்), ஜோகூர் மாநில பொதுப்பணித் துறையினர் (Jabatan Kerja Raya Negeri Johor), பள்ளி துணை ஊழியர்கள், மாணவர்களின் ஆடைகளை அழகாக உருவாக்கிய திருமதி கன்னியமா மோகன் மற்றும் உதவி புரிந்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் மாசாய் தமிழ்ப்பள்ளியினர் தெரிவித்துள்ளனர்.

-படங்கள், செய்தி உதவி : கஸ்தூரி இராமலிங்கம்