கோவை, மே 29 – ஆனைகட்டியில் உள்ள ஆசிரமத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் திடிர் வருகை தந்து, தயானந்த சரஸ்வதி சுவாமியிடம் ஆசி பெற்று சென்றார். நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
இதனால் அவர், அடிக்கடி ஆன்மிக குருமார்களை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். இதற்காக அவர் அடிக்கடி இமயமலைப்பகுதிக்கும் சென்று வருவார்.
இந்த நிலையில் அவர் தனது ‘லிங்கா’ திரைப்படம் வெளியான பிறகு முதன் முறையாக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு காலை 10.20 மணிக்கு வந்தார்.
பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் கோவையை அடுத்த ஆனைகட்டியில் உள்ள தயானந்த சரஸ்வதி சுவாமியின் ஆசிரமத்துக்கு சென்றார். பின்னர் அவர், அங்கு சிறிது நேரம் தியானம் செய்து விட்டு, தயானந்த சரஸ்வதி சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.
மேலும் அவர் சுவாமியின் உடல் நலம் குறித்து விசாரித்ததாக தெரிகிறது. சுமார் 2 மணி நேரம் ஆசிரமத்தில் தங்கியிருந்த ரஜினிகாந்த், பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோவை விமானம் நிலையம் வந்தார். அவர் மதியம் 3.30 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக விமானம் நிலையம் வந்த ரஜினிகாந்தை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர். அப்போது அவர், ‘‘நான் கோவை ஆனைகட்டியில் உள்ள ஆசிரமத்துக்கு வந்து விட்டு செல்கிறேன்’’ என்று கூறி விட்டு விமான நிலையத்துக்குள் சென்று விட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் வந்த தகவலை அறிந்ததும் ரசிகர்களும், பயணிகளும் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.