சென்னை, ஜூன் 4 – மேகி நூடுல்சில் ரசாயன பொருட்கள் சேர்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பீகார், உத்தரபிரதேசம் மாநிலங்களில் இந்த நூடுல்சை சாப்பிடுபவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மேகி நூடுல்சை பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளன. மேகி நூடுல்ஸ் விளம்பரங்களில் நடித்த அமிதாப்பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு பீகார் மாநிலத்தில் உள்ள முஸாபர்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேவைப்பட்டால் அமிதாப்பச்சன் உள்ளிட்ட ஐந்து பேரையும், கைது செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறும்போது;
“மேகி நூடுல்ஸ் விளம்பர படத்தில் நடிப்பதை இரு வருடங்களுக்கு முன்பே நிறுத்தி விட்டேன். எனவே வழக்கை சட்டப்படி சந்திப் பேன்” என்று அறிவித்து உள்ளார்.
மேகி நூடுல்ஸ் சர்ச்சையால் வேறு விளம்பர படங்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழ் நடிகர்களை பொறுத்தவரை பலர் விளம்பர படங்களில் நடித்து வருகின்றனர். விஷால், கார்த்தி, சூர்யா, ஆர்யா, சிம்பு, தனுஷ், சினேகா, பிரபு, தேவயாணி உள்ளிட்ட பலர் விளம்பர படங்களில் நடித்து வருகிறார்கள்.
சிவகார்த்திகேயனை குளிர்பான விளம்பரத்தில் நடிக்க ஒரு நிறுவனம் சமீபத்தில் அணுகியது. அவர் மறுத்து விட்டார். விளம்பர படங்களில் நடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி இருக்கின்றன.
இதற்கு தற்போது, விஷால், ஆர்யா எதிப்பு தெரிவித்துள்ளனர். விளம்பரப்படத்தில் நடிப்பவர்கள், மக்கள் சாப்பிட உகந்தது என அரசு சான்று அளித்த விளம்பரங்களிலே நடிக்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது:– “இறக்குமதியாகும் உணவு பண்டங்கள் மற்றும் உள்நாட்டு உணவு பொருட்கள் அனைத்தும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன”.
“அந்த அமைப்பு சான்று அளித்த பிறகுதான் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. உணவு வகைகள் நுகர்வோர் சாப்பிட உகந்தது என அரசு சான்று அளித்த பிறகே அவற்றில் நாங்கள் நடிக்கிறோம்”.
“விளம்பரங்களில் நடிப்பதற்காக எங்களுக்கு தரப்படும் சம்பளத்துக்கு வருமான வரியும் கட்டி விடுகிறோம். எனவே உணவு பொருட்களின் தரம் பற்றிய பிரச்சினையில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. தரமான உணவு என சான்று அளித்த அரசுதான் முழு பொறுப்பும் ஏற்க வேண்டும்”.
“கே.எப்.சி., பவுன்டன் டேவ் நிறுவனங்களுக்கு நான் விளம்பர தூதுவராக இருக்கிறேன். அவற்றை அடிக்கடி சாப்பிடவும் செய்கிறேன். எந்த பிரச்சினையும் இல்லை என ஆர்யா கூறினார்.
இது குறித்து நடிகர் விஷால் கூறும் போது; ‘‘நான் விளம்பர படமொன்றில் நடிக்கிறேன். அதற்கு எதிர் காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் நிறுவனம் மட்டுமே பொறுப்பு ஏற்க வேண்டும். விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் பொறுப்பு ஏற்க முடியாது’’ என்றார் தெரிவித்துள்ளார்.