சியோல், ஜூன் 4 – தென் கொரியாவில் மெர்ஸ் நோய் வேகமாக பரவி வருவதால் முன் எச்சரிக்கை காரணமாக 700 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. தென் கொரியாவில் மெர்ஸ் நோய் தாக்கி இது வரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
35 பேர் இந்நோயல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1300 பேரை இந்நோய் தாக்கியிருக்கக்கூடும் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கையாக தனி அறையில் வைக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அந்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேகமாக பரவும் வைரஸை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டும் நேற்று 209 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன.
தற்போது மேலும் 491 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. தலைநகர் சியோலில் முக கவசம் அணிந்து செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவ்விவகாரத்தில் அரசு அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சுகாதார அதிகாரிகளின் அவசர கூட்டத்தை கூட்டிய அதிபர் பார்க்,
மெர்ஸ் வைரஸ் பரவாமல் தடுக்க விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.