Home உலகம் வெனிசூலா அதிபர் சவேஸ் மறைவு: ஐ.நா., உலக நாடுகள் இரங்கல்

வெனிசூலா அதிபர் சவேஸ் மறைவு: ஐ.நா., உலக நாடுகள் இரங்கல்

802
0
SHARE
Ad

venuzelaகாரகஸ், மார்ச்.7- புற்றுநோயால் அவதிப்பட்ட வந்த வெனிசூலா அதிபர் ஹியூகோ சவேஸ் (58), செவ்வாய்க்கிழமை காலமானார். இதையடுத்து, அந்நாட்டு மக்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர். ஐ.நா., அமெரிக்கா, ரஷியா, சீனா, கியூபா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சவேஸ், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் 10ஆம் தேதி கியூபாவுக்கு சென்றார். அங்கு 4ஆவது முறையாக அறுவை சிகிச்சை நடைபெற்றது.

2 மாத சிகிச்சைக்குப் பிறகு பிப்ரவரி மாதம் நாடு திரும்பினார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக அரசு கூறியது. எனினும், காரகஸ் நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில்  சவேஸ் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் வெளியானதும், சவேஸ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் அந்நாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. ஒரு வார காலத்துக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் குழுமினர். சிலர் துக்கம் தாங்காமல் அழுதனர். நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு துணை அதிபர் நிகோலஸ் மதுரோ அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:-

“நம் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தக்கூடிய தகவல் வந்துள்ளது. சவேஸ் நம்மை விட்டு பிரிந்து விட்டார். இந்தத் தருணத்தில் அனைவரும் அமைதி காக்க வேண்டும். நாடு முழுவதும் போலீஸ் மற்றும் ஆயுதம் ஏந்திய படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

அந்நாட்டு சட்டப்படி அதிபர் இறந்த 30 நாள்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அத்துடன் நாடாளுமன்றத் தலைவர் டியோஸ்டாடோ கபெல்லோ தாற்காலிக நிர்வாக பொறுப்பேற்க வேண்டும். ஆனால், தனக்கு அடுத்தபடியாக துணை அதிபர் மதுரோவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என சாவேஸ் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் இலியாஸ் ஜாவா கூறுகையில், “அடுத்த தேர்தல் அறிவிக்கப்படும் வரை சவேஸ் விருப்பப்படி மதுரோ இடைக்கால அதிபராக இருப்பார்” என்றார்.

சவேஸின் உடல் வெளிநாட்டு தலைவர்களின் அஞ்சலிக்காக வெள்ளிக்கிழமை ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “சவேஸின் விருப்பத்துக்கு உரிய மரியாதை கொடுப்பதுடன், அரசியல் சட்டத்தைக் காப்பாற்ற ராணுவம் உறுதுணையாக இருக்கும்” என பாதுகாப்பு அமைச்சர் டியாகோ மொலேரோ தெரிவித்தார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசூலா கச்சா எண்ணெய் வளம் மிக்கது. கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்தார் சவேஸ். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் வெற்றி பெற்றார். 2013 ஜனவரி 10ஆம் தேதி 4ஆவது முறையாக அதிபர் பதவி ஏற்பதாக இருந்தது.

ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக பதவியேற்றுக் கொள்ளவில்லை. சவேஸ் மறைவு குறித்து அறிவிப்பதற்கு சற்று முன்னதாக மதுரோ மற்றும் உயர் அதிகாரிகள் சிலர் கூறுகையில், “வெனிசூலா நாட்டின் எதிரிகள்தான் சவேஸுக்கு புற்றுநோயை உண்டாக்கினர். அது அவரைக் கொன்று விட்டது” என்று குற்றம் சாட்டினர். அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக குரல் கொடுத்த ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு அடுத்தபடியாக சவேஸும் அமெரிக்காவை கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலக நாடுகள் இரங்கல்

ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி-மூன்:-

தனது நாட்டின் ஏழை மக்களின் முன்னேற்றத்துக்கும் கொலம்பியாவில் அமைதி நிலவவும் சாவேஸ் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா:- சவேஸ் இழந்து தவிக்கும் வெனிசூலா மக்களுக்கும், அரசுக்கும் அமெரிக்கா எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றார்.

கியூபா:-

கம்யூனிச நாடான கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் சவேஸ் என்று புகழ்ந்துள்ள கியூபா அரசு சவேஸ் மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ரஷியா அதிபர் புதின்:-

அதிகபட்ச இலக்கை நிர்ணயித்துக் கொண்டவர் சவேஸ். இதனால் வலிமையான மனிதராக திகழ்ந்தார். அத்துடன் ரஷியா-வெனிசூலா உறவை பலப்படுத்திய அவருக்கு நன்றி என்றார்.

சீனா:-

வெனிசூலா அதிபர் சவேஸ் சிறந்த தலைவராக விளங்கியதுடன் சீன மக்களின் சிறந்த நண்பராகவும் விளங்கினார்.

ஈரான் அதிபர் முகமது அஹமதி நிஜாத்:-

மர்மமான நோய்க்கு சவேஸ் பலியாகி விட்டார். இதன் மூலம் வெனிசூலா துணிச்சல் மிக்க  வலிமையான மனிதரை இழந்து விட்டது என்றார்.