சென்னை, ஜூன் 8 – சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்தில் விஜய், அஜித் படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணியை எக்குத்தப்பாகப் பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டு தவிக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் கதை தான் இப்போது கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சாக உள்ளது.
நேற்று முன்தினம் டுவிட்டரில் வெங்கட் பிரபுவின் மாசு படத்தைக் குறி வைத்து அஜித் ரசிகர்கள் உருவாக்கிய ‘ஹேஷ் டேக்’ (Hash Tag) இந்திய அளவில் இடம்பிடித்தது. அதில் வெங்கட் பிரபுவை மட்டுமல்லாமல் படத்தில் நடித்த சூர்யாவையும், ‘கத்தி’ படப் பின்னணி பயன்படுத்தப்பட்டதற்காக விஜய்யையும் வறுத்தெடுத்து விட்டனர்.
ஒரு கட்டத்தில் ரசிகர்களின் செயல்கள் அளவிற்கு மீறிப் போய்க் கொண்டிருப்பதைத் தடுப்பதற்காக டுவிட்டருக்கு வந்தார் வெங்கட் பிரபு. அப்போது ஒரு ரசிகர், “மாசு படத்தில் சூர்யா தான் கதாநாயகன் என்று நம்பிக் கொண்டு திரையரங்கிற்குச் சென்று படம் பார்த்தால் படத்தின் கதாநாயன் சூர்யா அல்ல, பிரேம்ஜி தான்” என்று பதிவு செய்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வெங்கட் பிரபு, “மங்காத்தா படத்திலும் பிரேம்ஜி தான் கதாநாயகனா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் கொந்தளித்த அஜித் ரசிகர்கள், வெங்கட் பிரபுவை ஒருமையில் திட்டத் தொடங்கினர். ரசிகர்களின் பதிவுகளால் நொந்து போன வெங்கட் பிரபு, “போதும் உங்கள் வெறுப்பை நிறுத்திக் கொள்ளுங்கள். நாங்களெல்லாம் ஒரே குடும்பம். சினிமா தான் எங்களை இணைக்கிறது” என்று தனது பதிவில் குறிப்பிட்டார். எனினும் ரசிகர்கள் இறுதிவரை, அவரின் சமரசத்தை ஏற்கவில்லை.