சென்னை, ஜூன் 8 – பிரபாகரனின் சிலையை இடித்ததாக, ஜெயலலிதா அரசைக கண்டித்து வரும் 9-ஆம் தேதி கருப்பு கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்; “தமிழ் இனத்திற்கு அடையாளத்தை நிலைநாட்டிய தலைவர் பிரபாகரனின் உருவச் சிலையை, நாகை மாவட்டத்தில், பொய்கை நல்லூரில் அமைத்துள்ளனர்”.
“அவர்கள் வீரன் என்ற குலதெய்வத்தையும், ஐயனாரையும் வழிபட்டு வருகின்றார்கள். எனவே, தலைவர் பிரபாகரனை தமிழர்களின் காவல் தெய்வமாகக் கருதி சிலை வைத்துள்ளனர். உலகத் தமிழர்கள் உள்ளத்தில் தெற்கு பொய்கை நல்லூர் நிரந்தரமான இடத்தைப் பெற்று விட்டது”.
“ஆனால், அ.தி.மு.க. அரசு அதிரடிப்படையை ஏவி, முதலில் சிலையின் தலையைத் துண்டித்து எடுத்து, பின்னர் முழுமையாக இடித்துத் தகர்த்த அக்கிரமச் செயல் கண்டனத்திற்கு உரியதாகும்”.
“அ.தி.மு.க. அரசின் காவல்துறை அதிரடிப்படை வீரத்தின் நாயகன் சிலையை இடித்து உடைத்த செயல், தமிழர்களின் உள்ளத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டி இருக்கின்றது.”
“பிரபாகரன் சிலையை உடைத்து நொறுக்கிய அ.தி.மு.க. அரசைக் கண்டித்து, 9-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை நாகப்பட்டினம் வட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனக் கூறியுள்ளார் வைகோ.