கோலாலம்பூர், ஜூன் 16 – மஇகா- சங்கப்பதிவிலாகா இடையிலான வழக்கில், நேற்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது வழக்கறிஞருடன் கலந்தாலோசித்துவிட்டு, அதன் பின்னர் நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“நான் மிகவும் ஏமாற்றமடைந்துவிட்டேன். இந்த விவகாரத்தில் மனுவைத் தள்ளுபடி செய்ததற்குப் பதிலாக நீதிமன்றம் தீர்வு கண்டிருக்க வேண்டும். என்றாலும், அடுத்த நடவடிக்கைகள் குறித்து எனது வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிப்பேன்” என நேற்று பழனிவேல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக ‘தி ராயா போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
மஇகா – சங்கப்பதிவகம் இடையிலான வழக்கில், நேற்று வெளியிடப்பட்ட தீர்ப்பில், சங்கங்களின் சட்டம், பிரிவு 16 (1)-க்கு உட்பட்டு தான், சங்கப்பதிவிலாகா செயல்பட்டுள்ளதாகவும், அது தனது அதிகாரத்தை எவ்வகையிலும் துஷ்பிரயோகம் செய்யவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், சங்கப்பதிவிலாகாவிற்கு எதிராக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பு தொடுத்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.