Home நாடு சங்கப் பதிவிலாகா சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட்டுள்ளது – மஇகா வழக்கில் தீர்ப்பு!

சங்கப் பதிவிலாகா சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட்டுள்ளது – மஇகா வழக்கில் தீர்ப்பு!

741
0
SHARE
Ad

MICகோலாலம்பூர், ஜூன் 15 – மஇகா – சங்கப்பதிவகம் இடையிலான வழக்கில், இன்று வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பில், சங்கங்களின் சட்டம், பிரிவு 16 (1)-க்கு உட்பட்டு தான், சங்கங்களின் பதிவிலாகா செயல்பட்டுள்ளதாகவும், அது தனது அதிகாரத்தை எவ்வகையிலும் துஷ்பிரயோகம் செய்யவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், சங்கங்களின் பதிவிலாகாவின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்வதாக 2 கடிதங்கள் அனுப்பிவிட்டு, இப்போது தனது நிலையில் இருந்து மாற்றிக் கொள்ளக்கூடாது என்றும் நீதிபதி அஸ்மாபி முகமட் அறிவித்துள்ளார்.

இந்த வழக்கில், மூன்றாம் தரப்பாக (Intervener) சேர்த்துக் கொள்ளும் படி கோரிக்கை விடுத்திருந்த தனிநபர்களின் மனுக்களையும்  நீதிபதி ஏற்றுக்கொண்டு அவர்களுக்கும் செலவுத் தொகையை வழங்க வேண்டுமென வாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதன்படி, செனட்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு 30,000 ரிங்கிட்டும், சங்கப் பதிவகத்திற்கு 90,000 ரிங்கிட்டும் செலவுத் தொகையாக வாதிகள் வழங்க வேண்டுமெனவும் நீதிபதி டத்தோ அஸ்மாபி முகமட் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

செலவுத் தொகை வேண்டாம் – சரவணன் தரப்பு அறிவிப்பு

m.saravanan1-may7

இதற்கிடையில் மூன்றாம் தரப்பாக வழக்கில், 2009 மத்திய செயலவை சார்பில் மனு செய்திருந்த டத்தோ சரவணன் தனக்கு செலவுத் தொகை எதுவும் வேண்டாம் என தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருந்தார்.

“இந்த வழக்கு மஇகா குடும்பம் சம்பந்தப்பட்டது. நியாயத்தையும், நீதியையும் நிலைநாட்டுவதற்காகவே இந்த வழக்கில் மூன்றாம் தரப்பாக நான் தலையிட்டேன். அதற்காக, ஒருவருக்கொருவர் செலவுத் தொகையை கேட்பது முறையற்றது என்பதால் நான் செலவுத் தொகை எதையும் கோரவில்லை” என இந்த வழக்கு தொடர்பாக ‘செல்லியல்’ தொடர்பு கொண்டபோது டத்தோ சரவணன் தெரிவித்தார்.

2009 மத்திய செயலவையே செல்லும்

2013 மத்திய செயலவையின் தேர்தல் கறை படிந்தது என்றும், அதில் நிறைய குளறுபடிகள் நடந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ள நீதிபதி, 2009 மத்திய செயலவையே செல்லுபடியாகும் என்றும் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சங்கப்பதிவிலாகாவிற்கு எதிரான வழக்கு, செலவுகளுடன் நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இத்தீர்ப்பைக் கேட்ட மஇகா தலைவர்களில் சிலர் உண்மையும், நீதியும் காக்கப்பட்டுள்ளதாகவும், மஇகா மறுதேர்தல் விரைவில் நடத்தப்படும் என்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.