Home நாடு “2 ஆண்டுகள் பிரதமராகத் தாக்குப் பிடிப்பேன், அன்வாருக்கு விட்டுக் கொடுப்பேன்” – மகாதீர் நம்பிக்கை

“2 ஆண்டுகள் பிரதமராகத் தாக்குப் பிடிப்பேன், அன்வாருக்கு விட்டுக் கொடுப்பேன்” – மகாதீர் நம்பிக்கை

1026
0
SHARE
Ad

mahathir-anwar-ibrahimகோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் ஆட்சியைக் கைப்பற்றினால் பிரதமராக சுமார் இரண்டு ஆண்டுகள் தாக்குப் பிடித்துத் தன்னால் பணியாற்ற முடியும் என துன் மகாதீர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ஜப்பானியப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 93 வயதான மகாதீர் இரண்டாவது முறையாகத் தான் பிரதமரானால் நீண்ட காலத்திற்குப் பிரதமராகப் பணியாற்ற எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் பிரதமராகி பதவி விலகும் நேரம் வரும்போது, பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு பெற்றுக் கொடுத்து அவரையே அடுத்த பிரதமராக நியமிக்கப் போவதாகவும் மகாதீர் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

Anwar Mahathir 1“நாங்கள் முயற்சி செய்வோம். எல்லா வகையிலும் அன்வாருக்கு அரச மன்னிப்பு கிடைக்க ஆவன செய்வோம்” என தனது பேட்டியில் மகாதீர் உறுதியளித்திருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்ற ஒருவர் தனது சிறைத் தண்டனை முடிந்ததும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் இருப்பதால், அன்வாரை அரசுப் பதவியில் அமர வைப்பதற்கு முன்னால் அவருக்கு அரச மன்னிப்பு பெற வேண்டியது அவசியமாகும்.

மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையிலான நீண்ட கால நட்பும், அரசியல் மோதலும் மலேசிய அரசியல் களத்தில் பல வரலாற்றுபூர்வ சம்பவங்களை உள்ளடக்கியதாகும்.

1974-ஆம் ஆண்டுகளில், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு ஆதரவாக  மாணவர் தலைவராக மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார் அன்வார் இப்ராகிம். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகாலம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தைப்பிங் கமுந்திங் சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

anwar-mahathir-jpg-old-photoஅந்த காலகட்டத்தில் மகாதீர் கல்வி அமைச்சராக இருந்தார். ஆனால், அதே மகாதீர் பின்னர் 1981-ஆம் ஆண்டில் பிரதமரான பின்னர் அன்வார் இப்ராகிமை அம்னோவுக்குள் அழைத்து வந்து பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வைத்தார். துணையமைச்சராக்கினார்.

கால ஓட்டத்தில் அம்னோவில் நிகழ்ந்த குழப்பங்கள் – அரசியல் போட்டிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அன்வாரைத் துணைப் பிரதமர்-அம்னோவின் துணைத் தலைவர் பதவிவரை கொண்டு சென்றன.

அதன்பின்னர் மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையில் நிகழ்ந்த போராட்டங்கள் நாடே அறிந்தவை. தற்போது மீண்டும் இருவரும் அரசியல் ரீதியாகக் கைகோர்த்திருக்கின்றனர்.

அவர்களின் இணைப்பு எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற ஆர்வம் மலேசியாவில் மட்டுமின்றி அயல் நாடுகளிலும் பெரும் பரபரப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.