Home நாடு 1 மில்லியன் வங்கி நிதி: சிஐடி தலைவருக்கு எதிராக எம்ஏசிசி விசாரணை!

1 மில்லியன் வங்கி நிதி: சிஐடி தலைவருக்கு எதிராக எம்ஏசிசி விசாரணை!

886
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆஸ்திரேலிய அதிகாரிகளால் முடக்கப்பட்ட 1 மில்லியன் ரிங்கிட் வங்கி நிதி தொடர்பாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி), புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறைத் தலைவர் வான் அகமட் நஜுமுடின் முகமட்டுக்கு எதிராக விசாரணையைத் துவங்க இருக்கிறது.

இது தொடர்பாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் இரகசியப் புகார் ஒன்றைப் பெற்றதையடுத்து, வான் அகமட் நஜுமுடின் முகமட் மீது விசாரணை துவங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் அசாம் பாக்கி குறிப்பிட்டிருக்கிறார்.

“தொடக்கத்தில் இந்த வழக்கு குறித்து வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் நம்மால் உடனடியாக முடிவு செய்துவிட முடியவில்லை. நாங்கள் ஏற்கனவே கூறியது போல், காவல்துறையின் உள்விசாரணைக்கும், துணைப் பிரதமரின் அறிக்கைக்கும் மதிப்பளிக்கிறோம்”

#TamilSchoolmychoice

“நேற்று நபர் ஒருவரிடமிருந்து புதிதாகக் கிடைத்திருக்கும் இரகசியத் தகவல்களின் அடிப்படையில், மிக விரைவில் விசாரணையைத் துவங்குவோம்” என அசாம் பாக்கி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் காவல்துறை நடத்திய விசாரணையில், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறைத் தலைவர் வான் அகமட் நஜுமுடின் முகமட், ஆஸ்திரேலிய வங்கிக் கணக்கில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிதி வைத்திருந்ததில் எந்த ஒரு தில்லுமுல்லுவும் இல்லை என்பது தெரியவந்திருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் முகமட் ஃபுசி ஹாருன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.