Home நாடு அருள்குமார்: முஸ்லீம் அல்லாதாருக்கான முதல் ஆட்சிக் குழு உறுப்பினர் (நேர்காணல் -2)

அருள்குமார்: முஸ்லீம் அல்லாதாருக்கான முதல் ஆட்சிக் குழு உறுப்பினர் (நேர்காணல் -2)

503
0
SHARE
ஜ.அருள்குமார்

சிரம்பான் – (நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜ.அருள்குமார் செல்லியல் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் இரண்டாவது பாகமாகத் தொடர்கிறது)

2018 பொதுத் தேர்தல் நெருங்கும் போதே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் வாக்காளர்களிடத்தில் குறிப்பாக இந்தியர்களிடையே அரசியல் சிந்தனை மாற்றங்கள் உருவாகி வருவதை அருள்குமார் போன்ற (அன்றைய) எதிர்க்கட்சி போராட்டவாதிகள் உணரத் தொடங்கியிருக்கின்றனர்.

அதன் காரணமாக, இந்த முறை நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்காத்தான் கூட்டணியின் சார்பாக அதிகமான இந்திய சட்டமன்ற வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். மே 9 தேர்தல் முடிவுகளின்படி பக்காத்தான் கூட்டணி சார்பில் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற, அதன் காரணமாக இந்தியர்களுக்கு 2 ஆட்சிக் குழு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளின்படி நியமிக்கப்பட்ட இருவரில் ஒருவர்தான் நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார்.

அவருக்கு மனித வளம், தோட்டப் புறங்கள், முஸ்லீம் அல்லாதார் விவகாரப் பிரிவு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

முஸ்லீம் அல்லாதார் விவகாரப் பிரிவு -திட்டங்கள் என்ன?

முஸ்லீம் அல்லாதார் விவகாரப் பிரிவு குறித்துப் பேசத் தொடங்கும்போது உற்சாகமும், மிகுந்த எதிர்பார்ப்பும் அருள்குமாரின் முகத்தில் பிரதிபலித்ததைக் காண முடிந்தது.

“முஸ்லீம் அல்லாதார் விவகாரப் பிரிவை உருவாக்கி, இந்து, புத்தம், கிறிஸ்துவம், சீக்கியம் போன்ற சமயப் பின்னணி கொண்டவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்போம் என்றும் அவர்களுக்கான நலத் திட்டங்களைக் கொண்டு வருவோம் என்றும் 14-வது பொதுத் தேர்தல் அறிக்கையில் நாங்கள் வாக்குறுதி தந்தோம். அதன்படி பதவியேற்ற இரண்டே வாரத்தில் கீழ்க்காணும் ஊக்குவிப்புத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன” என்கின்றார் அருள்குமார்.

  • உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் பயில்பவர்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட் ஊக்குவிப்புத் தொகை
  • டிப்ளமா என்னும் கல்வித் துறையில் பயின்று வருபவர்களுக்கு 750 ரிங்கிட் ஊக்குவிப்புத் தொகை
  • சர்ட்டிபிகேட்  கல்வித் துறையில் பயின்று வருபவர்களுக்கு 500 ரிங்கிட் ஊக்குவிப்புத் தொகை

இவை தவிர, முஸ்லீம் அல்லாதார் எதிர்நோக்கும் ஆலயங்கள், இடுகாடு, தமிழ்ப் பள்ளிகள் போன்ற பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண நாங்கள் மாநில அரசாங்கத்தின் சார்பில் முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்கிறார் அருள்குமார்.

“எனது பொறுப்பின் கீழ் வரும் தோட்டப் புறப் பிரச்சனைகளையும் கவனிக்கும் நோக்கில், சில தோட்டங்களில் எழுந்துள்ள தொழிலாளர்கள் பிரச்சனையிலும் கவனம் செலுத்தி வருகிறேன்” என்றும் கூறுகிறார் அருள்குமார்.

மந்திரி பெசாரின் ஆதரவு

அமினுடின் ஹருண் – நெகிரி மந்திரி பெசார்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் ஹருண் தாங்கள் கொண்டு வரும் புதிய அணுகுமுறைகளுக்கும், மாற்றங்களுக்கும் ஆதரவாக இருக்கிறார் என மேலும் கூறுகிறார் அருள்குமார்.

அதுமட்டுமின்றி எதிர்வரும் மாநில வரவு செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) இஸ்லாமியர் அல்லாதார் விவகாரப்பிரிவுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட முடிவெடுத்துள்ளோம் – இதன் மூலம் இனி நேரடியாக இந்த விவகாரங்களுக்கான நிதியைப் பயன்படுத்த முடியும் என்றும்  அருள்குமார் தெரிவித்தார்.

தூய்மையும் நேர்மையும் எங்களின் இலக்கு

நெகிரி மாநில மக்களின் நலன்களுக்காக தூய்மையான ஆட்சியை வழங்க வேண்டும் – அதிகாரம் தவறாகப் பயன்படுத்தக் கூடாது – நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும் என்ற இலக்குகளோடு மாநில அரசாங்கம் பயணிக்கத் தொடங்கியுள்ளது என்று கூறும் அருள்குமார் அதற்கு முதல்படியாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தங்களின் சொத்து விவரங்களை ஆட்சிக் குழுவில் பகிரங்கமாக வெளியிட்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

அருள்குமாரின் அரசியல் பயணம்….

சாதாரண தோட்டக் குத்தகைத் தொழிலாளர் பெற்றோர்களுக்குப் பிறந்து, 4 சகோதர சகோதரிகளுடன் வளர்ந்து, தமிழ்ப் பள்ளியில் கல்வி கற்று, ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அருள்குமாரின் அரசியல் சமூகப் பார்வையும், தீவிர அரசியல் ஈடுபாடுகளும் இன்று இந்த இளைஞரை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராகவும், பக்காத்தான் ஆட்சியின் கீழ் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் எதிர்கால இந்திய சமுதாயத்தின் நம்பிக்கை முகங்களில் ஒருவராகவும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

இவரது மனைவியும் ஆசிரியராக இன்னும் பணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இரண்டு குழந்தைகளைக் கொண்ட குடும்பம் இவர்களுடையது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அருள்குமார் போன்றவர்களிடம் ஒரு வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது.முதலாவதாக எதிர்க்கட்சிகளில் இருந்து கொண்டு போராளிகளாக – எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி – பதவிகளை அடைவோம் என்ற நம்பிக்கையின்றி – உழைத்தவர்கள் – என்பதால் பிரச்சனைகளின் இரண்டு பக்கங்களையும் இப்போது இவர்களால் உணர முடிகிறது.

ஆட்சிக்கு வந்து விட்ட காரணத்தால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்ட வேண்டும், அதன்படி செயலாற்ற வேண்டும், மாநில மக்களுக்கான நன்மை பயக்கும் திட்டங்களை இன, மத பாகுபாடின்றி, நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்ற ஆர்வமும், வேகமும், சுறுசுறுப்பும் அவர்களின் பணிகளில், செயல்களில் வெளிப்படுகின்றது.

இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லாமல், இயன்றதையெல்லாம் மாற்றிக் காட்ட வேண்டும் – உருமாற்றங்கள் கொண்டு வரவேண்டும் – என்ற அதிரடி அணுகுமுறைகளோடு தங்களின் பணிகளைத் தொடங்கியிருக்கின்றனர்.

அருள்குமாரின் முயற்சிகளும். திட்டங்களும் வெற்றியடைய வாழ்த்து கூறுவோம்.

-இரா.முத்தரசன்

Comments