திருப்பதி, ஆகஸ்ட் 8- திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் தேவைக்கு அதிகமாக உள்ள ஒரு டன் தங்கத்தை வங்கியில் முதலீடு செய்யத் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
உலக அளவில் பெருமளவு காணிக்கைகள் வந்து குவியும் கோயில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில்.நாள்தோறும் கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கோடிக் கோடியாகப் பணத்தையும் 10 பவுன் 100 பவுன் என்று சவரன் சவரனாகத் தங்கத்தையும் காணிக்கையாகக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.
இதனால் திருப்பதியில் பணமும் தங்கமும் மலையெனக் குவிந்து கிடக்கின்றன. பணத்தையும் தங்கத்தையும் எண்ணுவதற்கே ஆயிரக்கணக்கில் ஆட்கள் வேலை செய்கிறார்கள்.
காணிக்கையாக வந்து குவிந்த தங்கத்தைத் தேவஸ்தானம் இதற்கு முன் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தது. இதற்குத் தேவஸ்தானம் வங்கிக்குப் பணம் செலுத்த வேண்டியிருந்தது.
அதன் பின்பு, தலைமைக் கணக்கர் பாலாஜியின் ஆலோசனைப்படி தங்கத்தைப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்காமல், தங்க வைப்பு நிதி மூலம் வங்கியில் சேர்த்தனர்.
இவ்வாறு வங்கியில் பாதுகாக்கும் தங்கத்திற்கு வட்டியாகத் தங்கத்தையே திருப்பி அளிக்கும்படி, வங்கியிடம் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதன்படி, தற்போது தேவைக்கு அதிகமாகக் கோவில் பெட்டகத்தில் உள்ள தங்க நகைகளை உருக்கி ஒரு டன் தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாகத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.