கோலாலம்பூர் – ஐ.நா மற்றும் உலக நாடுகளை எதிர்த்து அணு ஆயுதச் சோதனைகளையும், ஏவுகணைகளையும் பரிசோதித்து வரும் வடகொரியாவுடனான உறவைத் துண்டித்துக் கொள்வது குறித்து மலேசியா ஆலோசனை நடத்தி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்திருக்கிறார்.
“அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்த போது வடகொரியா குறித்துப் பேசினேன். வடகொரியாவின் அணு ஆயதச் சோதனைகளால், ஆசியாவிலுள்ள மக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து கவலையடைந்தோம்.”
“எனவே, வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா எடுத்திருக்கும் அனைத்து முடிவுகளுக்கும் மலேசியா ஒத்துழைப்பு கொடுக்கவிருக்கிறது. அதன் படி, வடகொரியாவிலுள்ள மலேசியத் தூதரகத்தைத் திரும்பப் பெறுவது, மலேசியாவிலுள்ள வடகொரிய தூதரகத்தைக் கலைத்து அவர்களைத் திருப்பி அனுப்புவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்து வருகின்றோம்” என்று நஜிப் தெரிவித்திருக்கிறார்.
அதேவேளையில், வடகொரியாவுடனான பொருளாதார தொடர்புகள் குறித்தும் மலேசியா ஆய்வு செய்து வருகின்றது என்றும் நஜிப் தெரிவித்திருக்கிறார்.