பினாங்குச. 20 – பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க இலக்கியத் திருவிழா 2017 மற்றும் செந்துறை கவிஞர் சோலை முருகன் கவிதைப்போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் எதிர் வரும் 30 டிசம்பர் 2017 சனிக்கிழமை மாலை மணி 3:00 க்கு, புக்கிட் மெர்த்தாஜாம், பண்டார் பெர்டா, செபராங் பிறை நகராண்மைக் கழக, மாநாட்டு அரங்கில் மிகப்பிரமாண்டமான அளவில் நடைபெறும் என்று சங்க செயலாளர் செ.குணாளன் தெரிவித்தார்.
இலக்கியச் சுவை மழையில் நனைந்து, இலக்கிய இன்பம் பெருகவும் நாடுத் தழுவிய நிலையில் உள்ள எழுத்தாளர்களையும், இலக்கிய சுவைஞர்களையும் வருக வருக என்று அழைக்கும் பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம், எழுச்சிப் பாடல்கள், பண்பாட்டு நடனங்கள், உலகம் போற்றும் இலக்கியச் சொற்பொழிவுகள், பரிசுப்பெற்ற கவிதை ஒரு இலக்கியப் பார்வை என்று மிகவும் சுவையான அங்கங்களோடு நிகழ்ச்சியை எற்பாடு செய்துள்ளதாக பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் செ.குணாளன் நாளிதழ்களுக்கு வழங்கியச் செய்தியில் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கும் இலக்கியத் திருவிழா 2017 நிகழ்ச்சியில், சங்கத்தின் தலைவர் டாக்டர் வெ.தேவராஜுலுவின் தலைமையுரை இடம் பெறுகிறது.
இதே நிகழ்ச்சியில் ‘உலக வாழ்வியல் நூல் திருக்குறள்’ எனும் தலைப்பில் கு.கிருஷ்ணசாமியும், ‘மலேசியத் திருநாட்டில் கவிதை இலக்கியம்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் முருகு மாதவன், ‘பரிசு கவிதை ஒரு பார்வை’ என்று எழுத்தாளர் திருமாமணி ஆகியோரும் உரையாற்றுவர்.
பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க இலக்கியத் திருவிழா 2017 எனும் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு இலக்கிய உரையாக மலேசியத் தமிழ் நெறி கழகத்தின் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் “தமிழினத் தொன்மமும் இலக்கியப் பெருவளமும் “ என்ற தலைப்பில் உரையாற்றுவார் என்பதால் இலக்கிய ஆர்வலர்கள் இதனையே அழைப்பாக ஏற்று இலக்கியத் திருவிழா 2017 நிகழ்ச்சியில் திரளாகத் திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
எதிர்வரும் 30-12-2017 சனிக்கிழமை, பண்டார் பெர்டா, செபராங் பிறை நகராண்மைக் கழக அரங்கிற்கு வருகை தந்து இலக்கிய சுவைப்பருக தமிழ் ஆர்வலர்கள் அழைக்கப்படுகிறார்கள்.