கோலாலம்பூர் – நாளை மலர்கின்ற 2018 புத்தாண்டு தினத்தில் பத்துமலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பிரம்மாண்டமான முருகன் திருவுருவச் சிலைக்கு நடைபெறவிருக்கும் பன்னீர் அபிஷேக சிறப்பு நிகழ்ச்சிக்குத் திரளாகக் கலந்து கொள்ளும்படி முருக பக்தர்களை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தேவஸ்தானத்தின் சார்பில் அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை நடைபெறுகின்ற பன்னீர் அபிஷேகம் இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறுகின்றது.
பிரம்மாண்டமான முருகன் திருவுருவச் சிலை நிர்மாணிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதனைக் கொண்டாடும் விதமாக கடந்தாண்டு பன்னீர் அபிஷேகம் முதன் முறையாக நடத்தப்பட்டது.
அந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு பக்தர்களிடையே கிடைத்த ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து நாளை புத்தாண்டு தினத்தில் இரண்டாவது ஆண்டாக இந்த பன்னீர் அபிஷேகம் நடத்தப்படுகின்றது.
காலை 8.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் காலை 9.00 மணிக்கு முருகன் திருவுருவச் சிலைக்கு பன்னீர் அபிஷேகம் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானமும் நடைபெறும்.