கோலாலம்பூர் – இந்திராகாந்தியின் இளைய மகள் பிரசன்னா தீக்சாவை தாயாருடன் சேர்த்து வைக்க முடியவில்லை என்றால், தேசியக் காவல்படையின் தலைவரான முகமது ஃபுசி ஹாருன் பதவி விலக வேண்டும் என ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் நெருக்கடி கொடுத்திருக்கிறார்.
இது குறித்து லிம் கிட் சியாங் கூறுகையில், “அனைத்து விதமான வசதிகள் இருந்தும் காவல்துறையால் இந்திராவின் மகளை ஏன் சேர்த்து வைக்க முடியவில்லை. இந்திராவையும் அவரது மகளையும் சேர்த்து வைக்க முடியாத ஐஜிபி பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
பாலர் பள்ளி ஆசிரியை இந்திராகாந்தியின் மூன்று பிள்ளைகள், அவரது முன்னாள் கணவரால் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டது செல்லாது என கடந்த ஜனவரி 29-ம் தேதி, கூட்டரசு நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.