Home நாடு ஜப்பானில் பொங்கல் விழா – தமிழ்ச் சங்கம் கொண்டாடியது

ஜப்பானில் பொங்கல் விழா – தமிழ்ச் சங்கம் கொண்டாடியது

2286
0
SHARE
Ad
ponggal-japan-tamil sangam-03022018 (1)
தோக்கியோவில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் விபுலநாந்த அடிகளார் ஆவணப்படத்தை வெளியிடுகின்றார் ஜப்பான் தமிழ்ச்சங்க நிறுவுநர் கா. பாலமுருகன். முதல்படி பெறுகின்றார் டோக்கியோ மாமன்ற உறுப்பினர் இதேயுகி மசு ஏதோகவா. அருகில் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்கள்.

தோக்கியோ -ஜப்பான் தலைநகரில் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து அங்கு பொங்கல் விழாவை கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி மாலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவனுக்குத் ‘தொல்காப்பியக் காவலர்’ என்ற விருதை ஜப்பான் தமிழ்ச்சங்கம் வழங்கியது.

ஜப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். ஜப்பான் தமிழ்ச்சங்கம் சார்பில் இந்த ஆண்டு டோக்கியோ மாநகரில் அமைந்துள்ள கொமாட்சுகவா சகுரா அரங்கத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க்குடும்பத்தார் கலந்துகொண்ட இந்த விழாவில், பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ponggal-japan-tamil sangam-03022018 (3)
மு.இளங்கோவனுக்குத் தொல்காப்பியக் காவலர் என்ற விருதை வழங்குகின்றார் ஜப்பான் தமிழ்ச்சங்க நிறுவுநர் கா. பாலமுருகன். அருகில் ஜப்பான் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் சதீசு, வினோத்து, செந்தமிழன், மு. கலைவாணன்.

அண்மையில் தமிழகத்தில் மறைந்த தமிழ்க் கணினித்துறை வல்லுநர் தகடூர் கோபியின் மறைவுக்கு அகவணக்கம் செலுத்தும் நிகழ்வுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஜப்பான் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சதீசுகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன், பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன், வழக்கறிஞர் எழில் கரோலின் ஆகியோர் உரையாற்றினர்.

#TamilSchoolmychoice

ஜப்பான் தமிழ்ச்சங்கம் சார்பில் இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. முதல் படியைச் ஜப்பான் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் கா. பாலமுருகன் வெளியிட, டோக்கியோ மாமன்ற உறுப்பினர் இதேயுகி மசு ஏதோகவா பெற்றுக்கொண்டார்.

ponggal-japan-tamil sangam-03022018 (2)
ஜப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழாவைத் தொடங்கி வைக்கின்றார் பேராசிரியர் மு.இளங்கோவன்

தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியப் பரவலுக்கும் ஆராய்ச்சிக்கும் பெரும் பங்காற்றிவரும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் ஜப்பானியக் கிளை இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது. உலகத் தொல்காப்பிய மன்றத்தை நிறுவித் தமிழ்த்தொண்டாற்றிவரும் மு.இளங்கோவனுக்குத் தொல்காப்பியக் காவலர் என்ற விருதினைச் ஜப்பான் தமிழ்ச்சங்கம் வழங்கிப் பாராட்டியது.

ஜப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, குழந்தைகள் வழங்கிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.

ponggal-japan-tamil sangam-03022018 (4)ஜப்பான் நாட்டில் வாழும் பறையிசைக் கலைஞர் தயகோ குரோசவா என்பவர் தம் குழுவினருடன் கலந்துகொண்டு பறையிசை வழங்கியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் வழங்கிய தமிழின் சிறப்புரைக்கும் கையுறைப் பொம்மலாட்டக் கலைநிகழ்ச்சியுடன் விழா நிறைவுற்றது.