கோலாலம்பூர் – தனக்கு விதிக்கப்பட்ட ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டு மீதான தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என சிறையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடுத்த வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது.
நீதிமன்றத்தின் நீதி நடவடிக்கையை பின்புறக் கதவு வழியாக வந்து மறைமுகமாகச் சிதைக்கும் முயற்சி இதுவென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாங்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப் போவதாக அன்வாரின் வழக்கறிஞர் என்.சுரேந்திரன் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தனக்கு எதிராக பொய் கூறி மோசடியாகத் தன்மீது குற்றச்சாட்டுகள் வடிவமைக்கப்பட்டதாகத் தனது வழக்கில் அன்வார் குறிப்பிட்டிருந்தாலும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்பதால், இதற்குரிய பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு ஏதுவாக அவ்வாறு மோசடி செய்தவர்களை அன்வார் பெயர் குறிப்பிட வேண்டும் என நீதிபதி நிக் ஹஸ்மாட் நிக் முகமட் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
“அரசாங்கத் தரப்பு சாட்சிகளில் யார் பொய் கூறியது என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும். வேண்டுமென்றே மோசடி என நீதிமன்றத்தில் வார்த்தைகளை அள்ளித் தெளிக்கக் கூடாது” என தனது வாய்மொழித் தீர்ப்பில் தெரிவித்த நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு, அன்வார் அரசாங்கத்திற்கு 5 ஆயிரம் ரிங்கிட் செலவுத் தொகையை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
தன்மீது சுமத்தப்பட்ட இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் வழங்கப்பட்ட தண்டனை செல்லாது என்றும் எனவே தன்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அன்வார் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி இந்த வழக்கைத் தொடுத்திருந்தார்.
மலேசிய அரசாங்கம் இந்த வழக்கில் பிரதிவாதியாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
முகமட் சைபுல் புக்காரி அஸ்லான் தெரிவித்த பொய்யான சாட்சியங்களின் அடிப்படையில், தான் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும் அன்வார் தனது வழக்கில் சமர்ப்பித்திருந்தார். சைபுல் பொய் கூறுகிறார் என்பது அரசாங்கத்திற்குத் தெரிந்திருந்தது என்றும் அன்வார் தனது வழக்கில் சுட்டிக் காட்டியிருந்தார்.