Home நாடு வேலை நாளில் பொதுத்தேர்தல் – பெர்சே 2.0 கண்டனம்!

வேலை நாளில் பொதுத்தேர்தல் – பெர்சே 2.0 கண்டனம்!

748
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி, புதன்கிழமை நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், வேலை நாளில் பொதுத்தேர்தல் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதற்கு பெர்சே 2.0 அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக பெர்சே 2.0 வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வேலை நாள், பள்ளி நாளில் பொதுத்தேர்தல் வைக்கப்பட்டிருப்பதோடு, 11 நாட்கள் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

“வேலை நாளில் பொதுத்தேர்தல் வைத்தால், தொழிலாளர்கள் எப்படி வாக்களிக்க முடியும்? நகர்புறங்களில் பணிபுரிபவர்கள் வாக்களிப்பதற்காக சொந்த கிராமங்களுக்குச் செல்வதற்கு எப்படி முடியும்? குறிப்பாக தீபகற்ப மலேசியாவில் பணிபுரிந்து வரும் சபா, சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்வது மிகவும் கடினம்.

“அதேபோல், தேர்தல் பணிகளை மேற்கொள்பவர்கள், வாக்கு எண்ணுபவர்கள்,  பார்வையாளர்கள் ஆகியோர் தங்களது வேலைகளுக்கு விடுப்பு எடுத்து தான், தேர்தல், நியாயமான முறையில் நடப்பதற்குப் பங்காற்ற முடியும்.

“இப்படிப்பட்ட சூழ்நிலையில், வாக்குகள் பதிவு மிகவும் குறையும். எனவே பொதுத்தேர்தல் நடைபெறும் தேதியிலும், அதற்கு மறுநாளும் கூட்டரசு அரசாங்கம் பொதுவிடுமுறையை அளிக்க வேண்டும். அப்படியில்லை என்றால் தொழிலாளர்கள் 2 நாட்களுக்கு பதிவு செய்யப்படாத விடுமுறையை எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

“இதனிடையே, பள்ளிகளும், மற்ற பொது இடங்களும் வாக்குச்சாவடிகளாகப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது மற்றொரு கேள்விக் குறியாக இருக்கின்றது. இது பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகவும் நெருக்கடியாக இருக்கும்” என்று பெர்சே 2.0 கூறியிருக்கிறது.

மேலும், தேர்தல் பிரச்சார காலத்தை 21 நாட்களாக உயர்த்தும் படி, கடந்த 10 ஆண்டுகளாகக் கேட்டு வருகின்றோம். ஆனால் தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது என்றும் பெர்சே 2.0 குற்றம் சாட்டியிருக்கிறது.