Home நாடு “சாகிர் நாயக் – அன்று குரல் கொடுத்த குலசேகரன் இன்று மௌனம் ஏன்?” சுவாமி இராமாஜி...

“சாகிர் நாயக் – அன்று குரல் கொடுத்த குலசேகரன் இன்று மௌனம் ஏன்?” சுவாமி இராமாஜி கேள்வி

2011
0
SHARE
Ad

கோலாலம்பூர் –சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, உரக்கக் குரல் கொடுத்ததோடு, அந்த விவகாரம் குறித்து பல்வேறு முனைகளில் தனது வாதத்தை மக்கள் அரங்கில் முன்னெடுத்த எம்.குலசேகரன் (படம்) இன்று அமைச்சரான பின்னர் மௌனம் சாதிப்பது வருத்தத்தை அளிப்பதாக சுவாமி இராமாஜி தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் கூடிய அரசு சார்பற்ற பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் ஆலயங்களின் பிரதிநிதிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களில் சுவாமி இராமாஜியும் ஒருவராவார்.

நீண்ட காலமாக இந்து மத விவகாரங்களில் அரசு சார்பற்ற இயக்கங்களை ஒருங்கிணைப்பதிலும், இந்து மக்களின் கருத்துகளை முன் வைப்பதிலும் சுவாமி இராமாஜி (படம்) பாடுபட்டு வருகிறார்.

#TamilSchoolmychoice

“முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்திலும் இதே போன்ற தவறுகள்தான் நிகழ்ந்தன. பிரதமர் கூறிவிட்டார் என்பதற்காக அதன்பின்னர் அனைவரும் மறுப்பு தெரிவிக்காமல், மாற்று கருத்துகளை தெரிவிக்காமல், மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டதால்தான் பிரச்சனைகள் ஏற்பட்டன. மீண்டும் அதே நிலைமை தொடர்வதற்காகவா மாற்றத்தை ஏற்படுத்தினோம்?” என நேற்றைய கூட்டத்திற்குப் பின்னர் செல்லியல் ஊடகத்திடம் பிரத்தியேகமாக உரையாடியபோது சுவாமி இராமாஜி கேள்வி எழுப்பினார்.

“அன்று சாகிர் நாயக் விவகாரம் எழுந்தபோது பல்வேறு சட்ட நுணுக்கங்களை முன் வைத்து தனது கருத்துகளை துணிச்சலுடன் முன் வைத்த குலசேகரன் இதுவரையில் இந்த விவகாரத்தில் எந்தவித கருத்துகளையும் சொல்லாதது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது” என்றும் சுவாமி இராமாஜி மேலும் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 8) கூடிய 15-க்கும் மேற்பட்ட அரசு சாரா இந்து அமைப்புகளும், ஆலயங்களின் பிரதிநிதிகளும் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கின் நிரந்தர குடியிருப்பு தகுதியை இரத்து செய்ய வேண்டும் என்றும், அவரை இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க அவரது தாய் நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டனர்.

பிரிக்பீல்ட்சிலுள்ள கோப்பியோ எனப்படும் வெளிநாட்டு இந்தியர்களுக்கான உலக அமைப்பிற்கான அலுவலகத்தில் கூடிய இந்தக் குழுவினர், சாகிர் நாயக் குறித்து பிரதமர் துன் மகாதீர் தெரிவித்த கருத்துகள் குறித்தும் விவாதித்தனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைப்புகள் கூட்டத்திற்குப் பின்னர் ஒருங்கிணைந்த அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர்.