Home நாடு “சாகிர் நாயக்கை திருப்பி அனுப்புங்கள்” – இந்து அமைப்புகள் கோரிக்கை

“சாகிர் நாயக்கை திருப்பி அனுப்புங்கள்” – இந்து அமைப்புகள் கோரிக்கை

4571
0
SHARE
Ad
சுவாமி இராமாஜி

கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் கூடிய அரசு சார்பற்ற பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் ஆலயங்களின் பிரதிநிதிகள் ஒருமித்த குரலில் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கின் நிரந்தர குடியிருப்பு தகுதியை இரத்து செய்ய வேண்டும் என்றும், அவரை இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க அவரது தாய் நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டன.

பிரிக்பீல்ட்சிலுள்ள கோப்பியோ எனப்படும் வெளிநாட்டு இந்தியர்களுக்கான உலக அமைப்பிற்கான அலுவலகத்தில் கூடிய இந்தக் குழுவினர், சாகிர் நாயக் குறித்து பிரதமர் துன் மகாதீர் தெரிவித்த கருத்துகள் குறித்தும் விவாதித்தனர்.

15-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன. கூட்டத்திற்குப் பின்னர் ஒருங்கிணைந்த அறிக்கை ஒன்றையும் அந்தக் குழுவினர் வெளியிட்டனர்.

#TamilSchoolmychoice

அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செல்லியல் ஊடகத்திடம் தனிப்பட்ட முறையில் பிரத்தியேகமாக உரையாடிய ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சுவாமி இராமாஜி “இந்த விவகாரத்தில் எங்களுக்கென யார்மீதும் தனிப்பட்ட விரோதம் இல்லை. ஆனால், கடந்த தேசிய முன்னணி அரசாங்கம் செய்த அதே தவறை பக்காத்தான் அரசும் செய்யக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம். இந்த முறை இந்திய அரசாங்கமே சாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப விண்ணப்பித்திருப்பதால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதே முறையாகும்” எனத் தெரிவித்தார்.

மலேசியர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தியிருக்கும், நமது மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்திருக்கும் சாகிர் நாயக்கை ஏன் அரசாங்கம் இன்னும் தற்காத்து வர வேண்டும் என்றும் சுவாமி இராமாஜி கேள்வி எழுப்பினார்.

ஒட்டுமொத்த இந்திய சமுதாயமே ஒன்று திரண்டு தங்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்த பின்னரும், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம் ஒரு தனி நபரை இனியும் தற்காத்து வருவது முறையல்ல என்றும் சுவாமி இராமாஜி வலியுறுத்தினார்.