Home நாடு தமிழ்ப் பள்ளிகளுக்கு 5 கோடி! – கல்வி அமைச்சுடன் பேச்சு நடத்திய அந்த 6 பேர்...

தமிழ்ப் பள்ளிகளுக்கு 5 கோடி! – கல்வி அமைச்சுடன் பேச்சு நடத்திய அந்த 6 பேர் யார்?

1415
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்றைய (7 செப்டம்பர்) மக்கள் ஒசை நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தியின்படி தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு குறித்து கல்வி அமைச்சுடன் 6 பேர் கொண்டு குழு ஒன்று பேச்சு நடத்தியது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தகவலைத் தொடர்ந்து தமிழ்ப் பள்ளிகள் சார்பாக கல்வி அமைச்சிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு அதிகாரம் வாய்ந்த அந்தக் குழு எது? அந்தக் குழுவைப் பிரதிநிதிப்பதாகக் கூறப்பட்டிருக்கும் அந்த 6 பேர் யார்? அவர்களின் பின்னணி என்ன? தமிழ்ப் பள்ளிகள் சார்பாக நிதி பெறுவது குறித்து கல்வி அமைச்சிடம் பேச்சு வார்த்தை நடத்த இந்தக் குழுவுக்கு அதிகாரம் அளித்தது யார் என்பது போன்ற ஐயப்பாடுகளும், கேள்விகளும் இயல்பாகவே எழுந்திருக்கின்றன.

பக்காத்தான் அரசாங்கம் ஆட்சியேற்றது முதல் இந்தியர்களின் கல்வி விவகாரங்கள், தமிழ்ப் பள்ளிகள் நிலைமை போன்ற அம்சங்களில் இந்திய சமூகம் மிகுந்த ஏமாற்றத்தையே சந்தித்து வந்துள்ளது.

#TamilSchoolmychoice

முதல் கட்டமாக கல்வி அமைச்சில் துணை அமைச்சராக இந்தியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்தியர் ஒருவர் கல்வி அமைச்சில் துணையமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என இந்திய சமுதாயமும், மஇகாவும் நீண்ட காலமாகப் போராடி அதன்படி டத்தோ ப.கமலநாதனும் கல்வி அமைச்சின் துணை அமைச்சராக கடந்த சில ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வந்தார்.

ஆனால் பக்காத்தான் ஆட்சியில் இந்திய சமூகம் அந்த முக்கிய உரிமையை இழந்தது.

அப்போதெல்லாம், கமலநாதன் துணையமைச்சராகப் பதவி வகித்த காலகட்டத்தில் அவரது நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்ப் பள்ளிகள் குறித்தும் கல்வி அமைச்சு குறித்தும் நாள்தோறும் புகார்களும், குற்றச்சாட்டுகள் மட்டுமே பொதுமக்களாலும், இன்றைய ஆளும் கட்சியாக இருக்கும் அன்றைய எதிர்க்கட்சியான பக்காத்தான் கூட்டணியின் இந்தியத் தலைவர்களாலும் சுமத்தப்பட்டு வந்தன.

ஆனால், இப்போதோ கல்வி அமைச்சில் இந்தியர் கல்வி விவகாரங்கள், தமிழ்ப் பள்ளிகள் குறித்து என்ன நடக்கிறது என்பது போன்ற தகவல்களே இல்லை.

அதே வேளையில் கல்வி அமைச்சின் 7 பேர் கொண்ட தேசிய ஆலோசனை மன்றத்தில் இந்தியர் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. இதுகுறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டும் இதுவரையில் கல்வி அமைச்சில் முறையான பதில் இல்லை.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதுதான் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் விரைவில் இந்தியர் ஒருவர் இந்த ஆலோசனை மன்றத்தில் இடம் பெறுவார் என்று மட்டும் அறிவித்தார்.

இந்நிலையில்தான், கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் சமர்ப்பித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கு 5 கோடி ரிங்கிட் வழங்கப்படும் என விடுத்த அறிவிப்பின் நிலைப்பாடு என்ன? பக்காத்தான் அரசாங்கம் அந்த நிதியை வழங்குமா? அல்லது இரத்து செய்யுமா? என்பது போன்ற கேள்விகளை தமிழ் ஊடகங்கள் எழுப்பி வந்தன.

வெளிப்படைத் தன்மையைக் கையாள்வதாகக் கூறும்  பக்காத்தான் கூட்டணி அரசாங்கமும், கல்வி அமைச்சும், தமிழ்ப் பள்ளிகளுக்கான இந்த 5 கோடி ரிங்கிட் நிதியின் நிலைமை என்ன என்பது குறித்தும் –

அந்த நிதி குறித்து எந்த அமைப்புடன் அல்லது குழுவினருடன் சந்திப்பு நடத்தப்பட்டது – எந்த அடிப்படையில் சந்திப்பு நடத்தப்பட்டது – என்பது குறித்தும் –

பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்ப்பார்ப்புமாகும்!

-இரா.முத்தரசன்