கோலாலம்பூர் – “குழந்தையை முறைகேடான முறையில் கடத்திச் சென்று ஒளித்து வைத்திருப்பதும் அதனால் அந்தக் குழந்தையின் நலன்கள் பாதிக்கப்படுவதும் இஸ்லாம் மதத்தின் பெயரால் செய்யப்படக் கூடாது” என இஸ்லாமிய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஜாஹிட் ரவா கூறியுள்ளார்.
இந்திரா காந்தியின் புதல்வி பிரசன்னாவை அவரது முன்னாள் கணவர் கே.பத்மநாபன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லா ஒளித்து வைத்திருப்பது குறித்து கருத்துரைத்த முஜாஹிட் அந்தக் குழந்தையை தேடிக் கண்டுபிடிக்கும் காவல் துறையினரின் முயற்சிக்குத் தான் முழு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்தார்.
இன்றுவரை பிரசன்னா என்ற பெயர் கொண்ட இந்திரா காந்தியின் மகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இஸ்லாம் மதத்தைச் சார்ந்த சீன சமூகத்தினரின் இயக்கங்கள் உட்பட்ட இஸ்லாமிய இயக்கங்கள் கொண்டாடிய சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முஜாஹிட் ஒரு தலை சார்பான மத மாற்ற நடவடிக்கைகளால் ஏற்படும் பிரச்சனை இது எனவும் கருத்துரைத்தார்.
18 வயதுக்கும் குறைவான பிள்ளைகள் பெற்றோர்கள் இருவரின் சம்மதத்துடனேயே மத மாற்றம் செய்யப்பட வேண்டும் என இதுவரையில் அதிகாரபூர்வ சட்டம் அமுலாக்கப்படவில்லை என்றாலும், கடந்த 29 ஏப்ரல் 2016-இல் இந்த விவகாரத்தை விசாரித்த கூட்டரசு நீதிமன்றம் மதமாற்றம் விவகாரத்தில் பெற்றோர்கள் இருவரின் அனுமதியும் தேவை எனத் தீர்ப்பளித்தது.