Home நாடு அம்னோ-பாஸ்: கூட்டணி அமைந்தால், மஇகா, மசீச நிலை கேள்விக்குறி!

அம்னோ-பாஸ்: கூட்டணி அமைந்தால், மஇகா, மசீச நிலை கேள்விக்குறி!

906
0
SHARE
Ad

அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையிலான உயர்மட்டக் குழுவின் சந்திப்பு, நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியமான விவகாரங்கள் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அம்னோ-பாஸ் இடையிலான கூட்டணி அமைவதற்கு சாத்தியம் அதிகமாக உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆயினும், அவ்வாறான கூட்டணி அமைக்கப்பட்டால், மஇகா மற்றும் மசீச கட்சிகளின் நிலை குறித்த கேள்விகளும் எழுந்துள்ளது.

இடைத் தேர்தல்களில், அம்னோ- பாஸ் கட்சிகளின் ஒத்துழைப்பு மலாய் சமூகத்தினரிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நம்பிக்கைக் கூட்டணியில், அதிகமான மலாய்காரர் அல்லாதவர் உயர் பதவிகளில் இருப்பதுவும், இஸ்லாம் மற்றும் மலாய்காரர்களின் நலனில் சமீபக்காலமாக முஸ்லிம் அல்லாதவர்கள் கேள்விகளை பகிரங்கமாக எழுப்பி வருவதும், இந்த முடிவுக்கு வித்திட்டது எனக் கூறப்படுகிறது.

நாளைய சந்திப்பில் அம்னோ- பாஸ் கூட்டணி அமைக்கப்படுவதோடு, 15-வது பொதுத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் இணைந்து, ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடும் எனவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில், ஐபிஎப் மற்றும் மக்கள் சக்தி கட்சிகள் இந்தியர்களை பிரதிநிதித்தால் போதுமானது எனக் கூறி மஇகாவை தேசிய முன்னணியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கருத்துரைத்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ஆட்சியைப் பிடித்த 10 மாதத்திற்குள் நம்பிக்கைக் கூட்டணி அரசு மக்களிடத்தில் நம்பிக்கையை இழந்துள்ளது எனும் கூற்றினை நிரூபிக்கும் வகையில் நடந்து முடிந்த இரண்டு இடைத் தேர்தல்களின் முடிவுகள் பறைசாற்றுகின்றன. நம்பிக்கைக் கூட்டணியின் பங்காளி கட்சிகளே, அம்னோ-பாஸ் கட்சிகளை எதிர்த்து பெர்சாத்து கட்சி மலாய்காரர்களை பிரதிநிதிக்க இயலாது எனக் கூறுகின்றன.

நம்பிக்கைக் கூட்டணியில் ஜசெகவின் தலையீடல் அதிகமாக உள்ளதாலும், மலாய் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, பி.கே.ஆர் கட்சி துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறுகையில், நடப்பு திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு நம்பிக்கைக் கூட்டணி அரசு தீவிரமாக செயல்பட வேண்டுமென்றும், பாரபட்சமின்றி மலாய்க்காரர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில், துணிவுடன் இருந்து அவற்றை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு மலாய்க்காரர்கள் அல்லாதவர்களிடத்தில், குழப்பத்தையும் கேள்விகளையும் ஏற்படுத்தி உள்ளது. மலேசியா, மீண்டும் பழைய பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என சமூகப் பக்கங்களில் தங்களின் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.