ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் நேற்று திங்கிட்கிழமை பதவி விலகி விட்டதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார். நேற்று, 30 நிமிட சந்திப்பில் என்ன விசயங்கள் பேசப்பட்ட என பத்திரிக்கையாளர்கள் வினவிய போது எந்த ஒரு கருத்தினையும் வெளியிடாமல் இருந்தார். ஆயினும், தமது பதவி விலகல் குறித்த கடிதத்தை நேற்றைய சந்திப்பின் போதே அவர் கொடுத்து விட்டதாக பிரதமர் கூறினார்.
அவருக்குப் பதிலாக ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஷாருட்டின் ஜாமால் அவருடைய பதவியை ஏற்பார் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஜோகூர் மாநில சுல்தான், சுலதான் இப்ராகிம் இது குறித்து பல மாதங்களுக்கு முன்னமே கருத்து தெரிவித்து விட்டதாக தெங்கு மக்கோத்தா இஸ்மாயில் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
புத்ராஜெயாவுக்கும் ஜோகூர் அரண்மனைக்கும் இடையிலான பதட்டமான உறவே ஒஸ்மானின் இந்த பதவி விலகலுக்கு வித்திட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து கருத்துரைத்த தெங்கு இஸ்மாயில், அடுத்து வரக்கூடிய மந்திரி பெசார், புத்ராஜெயாவிற்கு தலை ஆட்டி பொம்பையாக இருக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். மக்களின் நலனையும், தேவையையும் அறிந்த ஒருவரே தலைமைப் பொறுப்பினை ஏற்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.