ரந்தாவ்: நாளை சனிக்கிழமை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு, குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பயனுள்ள தகவல் தொடர்பு திட்டங்களை அமைக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ராம்லி கூறினார்.
எதிர்க்கட்சியால் எழுப்பப்பட்ட மோசடிப் பிரச்சினைகளால், இம்மாதிரியான வாக்காளர்கள் தவறான கருத்துகளை நம்பி ஏமாந்து விடாமல் இருப்பதற்கு இந்தச் செயல்முறை அவசியமாகிறது என அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முயற்சிகள் தெளிவாக விவரிக்கப்படவில்லை என்றால், நடப்பில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளில் எதிர்கட்சியினர் வாக்காளர்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என அவர் தெரிவித்தார்.
எனவே, நம்பிக்கைக் கூட்டணி தலைமைத்துவம் எப்போதும் புதிய யோசனைகளை உருவாக்கவும், மக்களுக்கு நல்ல கொள்கைகளை அறிமுகப்படுத்தவும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
நாளை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் போட்டியிட, அவரை எதிர்த்து நம்பிக்கைக் கூட்டணி சார்பில் பிகேஆர் கட்சியின் டாக்டர் எஸ்.ஸ்ரீராம் களமிறங்குகிறார். இவர்களைத் தவிர ஆர்.மலர் என்ற இந்தியப் பெண்மணியும், முகமட் நோர் ஹசான் என்பவரும் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.