ஜோகூர் பாரு: பாசிர் கூடாங்கில் சட்டவிரோதமாக இயங்கிய மூன்று தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான ஒருங்கிணைந்த ஆய்வு நடவடிக்கையில் பல்வேறு அமலாக்க நிறுவனங்களால் சோதனை செய்யப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜோகூர் மாநில சுற்றுச்சூழல் துறை இயக்குனர் வான் அப்துல் லாதிப் வான் ஜாபார் குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் இப்பகுதியில் மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு உட்பட்டிருந்ததால் இம்மூன்று தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கபப்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகளினால், அத்தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் மற்றும் உபகரணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அதே நேரத்தில் பாசிர் கூடாங் நகராட்சி மன்றம் (எம்பிபிஜி) மூன்று தொழிற்சாலைகளையும் கைப்பற்றியது.
எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் இயோ பீ யின் மற்றும் மாநில ஊராட்சி, நகர நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் தலைவர் டான் செங் சூன் ஆகியோர் இந்த நடவடிக்கையின் போது உடன் இருந்தனர்.
நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, பல்வேறு அரசு நிறுவனங்களுடன் தொடர்ச்சியான ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் மொத்தம் 248 தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்பட்டன.
250 தொழிற்சாலைகள் மீதான ஆய்வின் ஆரம்ப இலக்கு நிறைவடையும் தருவாயில் இருந்தாலும், அது தொடர்ந்து நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.