Home நாடு நஜிப்-மகன் நசிபுடின் திவால் வழக்குகள் இடைக்காலத்திற்கு ஒத்தி வைப்பு

நஜிப்-மகன் நசிபுடின் திவால் வழக்குகள் இடைக்காலத்திற்கு ஒத்தி வைப்பு

617
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் அவரின் மகன் முகமட் நசிபுடின் இருவருக்கும் எதிராக உள்நாட்டு வருமான வரி இலாகா தொடங்கியிருந்த திவால் வழக்குகள் நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 21) மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் வருமானவரி பாக்கியான 1.69 பில்லியன் ரிங்கிட்டை செலுத்த வேண்டுமென அவர் மீது வருமானவரி இலாகா தீர்ப்பு ஒன்றை ஏற்கனவே பெற்றிருந்தது.

இதே போன்றதொரு வழக்கை நஜிப்பின் மகனான முகமட் நசிபுடின் மீதும் தொடுத்து, அவர் 37.6 மில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டுமென்ற தீர்ப்பையும் சம்மரி ஜட்ஜ்மெண்ட் என்ற அடிப்படையில் வருமான வரி இலாகா பெற்றிருக்கிறது.

முகமட் நசிபுடின் – நஜிப் மகன்
#TamilSchoolmychoice

இந்த இரண்டு தீர்ப்புகளின் அடிப்படையில் நஜிப்பையும் அவரின் மகனையும் திவாலாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையையும் வருமான வரி இலாகா மேற்கொண்டிருந்தது.

இந்த இரண்டு தீர்ப்புகளையும் அமுல்படுத்தக் கூடாது, அவற்றுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என நஜிப் தரப்பிலும் அவரின் மகன் தரப்பிலும் செய்யப்பட்டிருந்த மேல்முறையீடு நேற்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்புகளை அமுலாக்குவதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த வழக்குகளின் மேல்முறையீட்டைப் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்புகளை அமுலாக்குவதற்கு இடைக்காலத் தடை விதித்தது. 

கூட்டரசு நீதிமன்றத்திற்கான நஜிப் மற்றும் அவரின் மகனின் மேல்முறையீடு செவிமெடுக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்படும் வரையில் இந்த இடைக்காலத் தடை அமுலில் இருந்து வரும்.

இதனால் அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் நஜிப்பையும் அவரின் மகனையும் திவாலாக்கும் உள்நாட்டு வருமானவரி இலாகாவின் நடவடிக்கையும் இடைக்காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.

மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு ஏகமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியது.

நஜிப்பும் அவரின் மகனும் கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்து அனுமதிக்குக் காத்திருப்பதால் அதுவரையில் அவர்களுக்கு எதிரான தீர்ப்புகளை இடைக்காலத்திற்கு நிறுத்திவைப்பதற்கு தகுந்த சிறப்புக் காரணங்கள் இருக்கின்றன என மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

சம்மரி ஜட்ஜ்மெண்ட் (Summary Judgment) என்பது முழுமையான விசாரணையுடன் கூடிய வழக்கு நடைபெறுவதற்கு முன்னரே ஆவணங்களின் அடிப்படையில்வழக்கு நடத்தும் நேரத்தைச் சுருக்கிசீக்கிரமாகப் பெறப்படும் தீர்ப்பாகும். 

இந்தத் தீர்ப்புகளை அமுலாக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் நஜிப்பும் அவரின் மகனும் திவாலாக்கப்படும் நிலைமையும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி நஜிப்பும் அவரின் மகனும் கூட்டரசு நீதிமன்றத்திற்கு செய்திருந்த மேல்முறையீட்டில் 9 சட்டரீதியான கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என மனு செய்திருக்கின்றனர்.