Home நாடு சரவாக் வேட்புமனுத் தாக்கல் : எதிர்க்கட்சிகளிடையே பிளவு – பல்முனைப் போட்டிகள்!

சரவாக் வேட்புமனுத் தாக்கல் : எதிர்க்கட்சிகளிடையே பிளவு – பல்முனைப் போட்டிகள்!

633
0
SHARE
Ad

கூச்சிங் :இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 6) சரவாக் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 82 தொகுதிகளிலும் நடைபெறுகிறது.

ஒருபுறம் ஜிபிஎஸ் என்னும் பார்ட்டி காபுங்கான் சரவாக் கூட்டணியின் 4 உறுப்பியக் கட்சிகளும் தங்களுக்குள் இணக்கமாகத் தொகுதிப் பங்கீடுகள் கண்டுள்ளன.

இன்னொரு புறத்தில் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஜிபிஎஸ் கூட்டணியை எதிர்த்து நிற்கிறது. இந்தக் கூட்டணியின் சார்பில் பிகேஆர் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

#TamilSchoolmychoice

பக்காத்தானின் மற்றொரு உறுப்பியக் கட்சியான ஜசெக 26 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறது.

பார்ட்டி அமானா நெகாரா 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஆக மொத்தம் 62 தொகுதிகளில் பக்காத்தான் போட்டியிடுகிறது. வெற்றி வாய்ப்பு அதிகமில்லாத தொகுதிகளில் தங்களின் ஆற்றலையும் நேரத்தையும் செலவிட விரும்பவில்லை என பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார்.

கடந்த 2016 சரவாக் தேர்தலில் சில தொகுதிகளில் பக்காத்தானின் உறுப்பியக் கட்சிகளான பிகேஆரும், ஜசெகவும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டன. இந்த முறை அத்தகையப் போட்டிகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

எதிர்க்கட்சிகளிடையே ஒருமுகமான ஒற்றுமையும், இணக்கமும் ஏற்படாத காரணத்தால், பல தொகுதிகளில் உள்ளூர் அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

இதனால் பல தொகுதிகள் பல்முனைப் போட்டிகளை எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதி மாறும் முதலமைச்சர் அபாங் ஜோஹாரி

இதற்கிடையில், இந்தமுறை சரவாக் சட்டமன்றத் தேர்தலில் மாநில முதலமைச்சர் டான்ஶ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபெங் கடந்த 9 தவணைகளாகத் தற்காத்து வந்த சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் நிற்காமல் புதிய தொகுதியில் நிற்பது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

1981 முதல் சாத்தோக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருக்கிறார் அபாங் ஜோஹாரி. இந்த முறை பாத்தாங் சாடோங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான கெடோங் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்தக் கூட்டணியின் முதுகெலும்பாகத் திகழும் கட்சியான பிபிபி எனப்படும் பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சாத்துவின் (Parti Pesaka Bumiputera Bersatu -PBB) தலைவராக அபாங் ஜோஹாரி செயல்படுகிறார்.

எஸ்யுபிபி (Sarawak United People’s Party -SUPP), பிஆர்எஸ் (Parti Rakyat Sarawak – PRS), பிடிபி (and Progressive Democratic Party -PDP), ஆகிய கட்சிகளும் ஜிபிஎஸ் கூட்டணியில் இணைந்துள்ளன.

மொத்தமுள்ள 82 தொகுதிகளில் 47 தொகுதிகளில் பார்ட்டி பெசாகா போட்டியிடுகின்றது. மற்ற கட்சிகள் எஞ்சியத் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

டிசம்பர் 18-இல் வாக்களிப்பு

சரவாக் சட்டமன்றத்திற்கான தேர்தல் டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெறும். முன்கூட்டிய வாக்குப் பதிவு டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 6-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

சரவாக் தேர்தலுக்கு 12 நாட்கள் பிரச்சாரத்துக்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சரவாக் தேர்தலில் 1.25 மில்லியன் வாக்காளர்கள் பங்கெடுப்பார்கள். 1.23 மில்லியன் பேர் சாதாரண வாக்காளர்களாவர். 12,585 இராணுவத்தினரும் அவர்களின் மனைவிகளும், 10,458 காவல் துறையினரும் அவர்களின் மனைவிகளும் இந்த தேர்தலில் வாக்களிப்பர்.

70 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களிக்க வருவர் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கப்படுகிறது.

346 வாக்களிப்பு மையங்களில் காலை 7.30 தொடங்கி மாலை 5.00 மணிவரை வாக்களிப்பு, 30 நிமிட கூடுதல் நேர நீட்டிப்புடன் நடைபெறும். 1,520 வாக்களிப்பு மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின்படி வாக்களிப்பு நடைபெறும்.

சரவாக் தேர்தலை நடத்த சுமார் 150 மில்லியன் ரிங்கிட் செலவிடப்படும்.

ஜிபிஎஸ் சரவாக்கைத் தற்காக்க முடியுமா?

சரவாக்கைத் தற்போது ஆளும் ஜிபிஎஸ் கூட்டணி தொடர்ந்து வெற்றிகரமாகத் தற்காத்துக் கொள்ளுமா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

2016 சரவாக் தேர்தலுக்கும், இந்த ஆண்டு நடைபெறப் போகும் தேர்தலுக்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. அப்போது சரவாக் தேசிய முன்னணி என்ற பெயரில் போட்டியிட்ட 82 தொகுதிகளில் 72 தொகுதிகளை அந்தக் கூட்டணி கைப்பற்றியது. அந்தக் கூட்டணிக்கு அப்போதைய முதலமைச்சர் அட்னான் சாத்திம் தலைமையேற்றிருந்தார்.

எஞ்சிய 10 தொகுதிகளை பக்காத்தான் ஹாரப்பான் கைப்பற்றியது.

இந்த முறை தேசிய முன்னணி முற்றாக உடைந்து விட்டது. சரவாக் மாநில கட்சிகள் இணைந்து ஜிபிஎஸ் (காபுங்கான் பார்ட்டி சரவாக்) என்ற புதிய கூட்டணியைத் தோற்றுவித்திருக்கின்றன. அதில் உள்ள எல்லாக் கட்சிகளும் தேசிய முன்னணியிலிருந்து வெளியேறிவிட்டன. இன்றைக்கு சரவாக் தேசிய முன்னணி என்ற ஒன்றே இல்லை.

எனினும் தேசிய முன்னணி ஜிபிஎஸ் கூட்டணிக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளது. பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும் ஜிபிஎஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து விட்டு சரவாக் தேர்தலில் இருந்து ஒதுங்கி விட்டது.

எனவே, ஜிபிஎஸ் கூட்டணிக்கும், பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் போட்டியில் ஜிபிஎஸ் கூட்டணி வெல்வதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம் என்றாலும், பக்காத்தான் கூட்டணி எத்தனை சட்டமன்றங்களை வெல்ல முடியும் என்பதுதான் அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் கேள்வியாகும்.