Home நாடு ஐபிஎஃப் முதன் முறையாக தேசிய முன்னணி சின்னத்தில் போட்டி

ஐபிஎஃப் முதன் முறையாக தேசிய முன்னணி சின்னத்தில் போட்டி

522
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி தேசிய முன்னணியின் நட்பு இந்திய கட்சிகளுக்கு டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார்.

மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆர்.எஸ்.தனேந்திரன் பினாங்கிலுள்ள நிபோங் திபால் தொகுதியில் போட்டியிடுகிறார்.

நீண்டகாலமாக தேசிய முன்னணியை ஆதரித்து வந்திருக்கும் ஐபிஎஃப்  கட்சிக்கு முதன் முறையாக பினாங்கிலுள்ள ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐபிஎஃப் கட்சியின் தலைவர் டத்தோ லோகநாதன் துரைசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஆகக் கடைசியாக ஐபிஎஃப் கட்சி 1990-இல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. தெங்கு ரசாலி ஹம்சா தலைமையிலான செமாங்காட் 46 கட்சியோடு கூட்டணி அமைத்து ஐபிஎஃப் அந்தத் தேர்தலில் போட்டியிட்டது. 2 நாடாளுமன்றத் தொகுதிகள் ஐபிஎஃப் கட்சிக்கு அப்போது ஒதுக்கப்பட்டது.

அப்போதைய தலைவர் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் தெலுக் இந்தானிலும், கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஞானபாஸ்கரன் நிபோங் திபால் தொகுதியிலும் போட்டியிட்டனர். இருப்பினும் தோல்வி கண்டனர்.

அதன் பின்னர் அப்போதைய பிரதமர் துன் மகாதீர் அழைப்பின் காரணமாக ஐபிஎஃப் கட்சி தேசிய முன்னணியின் நட்புக் கட்சியாக மாறியது. உறுப்பியக் கட்சியாக தேசிய முன்னணியில் இணையும் அதன் முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

இந்த முறை ஐபிஎஃப் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஜெலுத்தோங் தொகுதி ஜசெகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் கர்ப்பால் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த இந்தத் தொகுதியில் ஜசெகவின் சார்பில் ஆர்.எஸ்.என்.ராயர் மீண்டும் போட்டியிடுகிறார்.