Home நாடு சரவாக் ஜிபிஎஸ் கூட்டணி, அடுத்த பொதுத் தேர்தல்வரை ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்

சரவாக் ஜிபிஎஸ் கூட்டணி, அடுத்த பொதுத் தேர்தல்வரை ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்

340
0
SHARE
Ad
சரவாக் முதலமைச்சர் அபாங் ஜோஹாரி ஓபெங்

கூச்சிங் : நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தின் முக்கிய அங்கம் சரவாக் மாநிலத்தை ஆளும் கூட்டணியான காபுங்கான் பார்ட்டி சரவாக் (ஜிபிஎஸ்). இந்தக் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தல் வரை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும் என சரவாக் முதலமைச்சரும் ஜிபிஎஸ் கூட்டணி தலைவருமான அபாங் ஜோஹாரி ஓபெங் தெரிவித்தார்.

இதன் காரணமாக, ஒற்றுமை அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுகளில் கவிழ்வதற்கு வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

ஜிபிஎஸ் கூட்டணியின் கோரிக்கைகள் ஒற்றுமை அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்டால் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் – ஜிபிஎஸ் கூட்டணிக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

அடுத்த பொதுத் தேர்தல் என்று வரும்போது பக்காத்தான் கூட்டணி இன்னொரு சிக்கலையும் எதிர்நோக்கப் போகிறது. கடந்த 25 ஆண்டுகளாக பிகேஆர் கட்சி ஜிபிஎஸ் கூட்டணி சார்ந்த கட்சிகளுடன் குறிப்பாக அவை இணைந்திருந்த தேசிய முன்னணிக்கு எதிராக சரவாக் மாநில சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டது.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் 2026-இல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் 2021-இல் நடைபெற்ற போது பக்காத்தான் கூட்டணி ஜிபிஎஸ் கூட்டணிக்கு எதிராகக் களமிறங்கி போட்டியிட்டது.

இப்போது ஒற்றுமை அரசாங்கத்தில் இரண்டு அணிகளும் இடம் பெற்றிருப்பதால் விட்டுக் கொடுக்கப் போவது யார் என்ற கேள்வி எழும்.

அதே போல பக்காத்தான் கூட்டணியின் ஒரு முக்கிய அங்கமான ஜசெக ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலிலும் சரவாக் மாநிலத்தில் தேர்ந்தெடுத்த சில தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறது.

இப்போது ஜசெக என்ன செய்யும்? ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்தாலும் ஜிபிஎஸ் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடுமா? அல்லது போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளுமா? அல்லது ஜிபிஎஸ் கூட்டணியுடன் ஒத்துழைப்பு கண்டு சரவாக்கில் புதிய கூட்டணியை உருவாக்குமா?

இதுபோன்ற காரணங்களால்தான் அடுத்த பொதுத் தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிப்போம் என ஜிபிஎஸ் கூட்டணி அறிவித்திருப்பதாகக் கருதப்படுகிறது.