பத்து பகாட் : ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார், மதத்தின் அடிப்படையில் தடைசெய்யப்படும் பழக்கவழக்கங்களுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நடைமுறைக்கு மாறான பழக்க வழக்கங்கள் ஒரு சமூகத்தில் வாழ்வதை சாத்தியமற்றதாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“தூய்மை” என்ற அடிப்படையில் முஸ்லீம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய மறுத்த முஸ்லீம்களுக்கு மட்டுமேயான சலவைக் கடையை விவரிக்கும் போது அவர் இந்த விஷயத்தை எழுப்பினார்.
“நீங்களே சிந்தித்துப் பாருங்கள். பொது இடங்களில் நாய்களால் நக்கப்படும் இருக்கைகள் அல்லது ஹோட்டல்களில் முஸ்லீம் அல்லாதவர்கள் பயன்படுத்திய தலையணைகள் மற்றும் போர்வைகள் போன்ற ‘நஜிஸ்’ தொடர்பு கொண்டவை (அசுத்தமான விஷயங்கள்) பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்” என்றும் சுல்தான் கேள்வி எழுப்பினார்.
“இது ஒருபோதும் முடிவடையாது. எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டும் என்றால், எனது ஆலோசனை என்னவென்றால் – ஒரு சமூகத்தில் வாழ்வதற்குப் பதிலாக ஒரு குகையில் தனியாக வாழ்வது நல்லது” என்று பத்து பகாட்டில் உள்ள துன் ஹுசைன் ஓன் பல்கலைக் கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியபோது சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.
சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இந்த உரையின் காணொலி பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதேபோல், பயன்படுத்தும் ரிங்கிட் நோட்டுகள் பன்றி இறைச்சி அல்லது மதுபானம் விற்பனை செய்பவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்றும் சுல்தான் இப்ராகிம் கூறினார்.
“அப்போது அரசாங்கம், முஸ்லிம்கள் மட்டும் பயன்படுத்தும் பணத்தை உற்பத்தி செய்ய வேண்டுமா?” என அவர் கேட்டார்.
முஸ்லீம்களுக்கு மட்டுமேயான சலவைக் கூடம் தொடர்பான சர்ச்சைக்குரிய கொள்கையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார் சுல்தான் இப்ராஹிம். அத்தகைய நடைமுறை மக்களைப் பிரிக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
“இந்த மாநிலத்தில் பல்லின மக்களிடையே அமைதியையும் ஒற்றுமையையும் பேணுவது மதத்தின் தலைவர் என்ற முறையில் எனது கடமையாகும். எனவே, பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று நான் கருதுவது தொடர்பில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
அத்தகைய நடைமுறை “தீவிரமானது” என்று அவர் மேலும் கூறினார். மேலும் இஸ்லாம் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துகிறது. அதே மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத மக்களுக்கும் நல்லது செய்கிறது என்ற அவர் “இந்த குறுகிய மனப்பான்மை ஜோகூரில் உள்ள முஸ்லிம்களின் வழி அல்ல,” என்றும் கூறினார்.