Home நாடு “அரசியல் ஆய்வாளர்கள் மஇகாவை சிறுமைப்படுத்த வேண்டாம்” – டத்தோ சிவா கணேசன் கண்டனம்!

“அரசியல் ஆய்வாளர்கள் மஇகாவை சிறுமைப்படுத்த வேண்டாம்” – டத்தோ சிவா கணேசன் கண்டனம்!

568
0
SHARE
Ad

மஇகா மத்திய செயலவை உறுப்பினரும்,
மஇகா பாகோ தொகுதி (ஜோகூர்)
முன்னாள் தலைவருமான
டத்தோ சிவா கணேசன் அவர்களின் பத்திரிகை அறிக்கை

“அரசியல் ஆய்வாளர்கள் என்ற பெயரில் விவரம் புரியாமல் மஇகாவை சிறுமைப்படுத்த வேண்டாம்”

“இந்திய வாக்குகளைக் கவர்வதில் பலவீனப்பட்டு இருப்பது ஒற்றுமை அரசாங்கமே! மஇகா அல்ல!”

அண்மையில் நடைபெற்ற மைபிபிபி கட்சியின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி மைபிபிபி மீண்டும் தேசிய முன்னணியில் சேர்த்துக் கொள்ளப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறியிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

அந்த கட்சியை தேசிய முன்னணியில் இணைத்துக்கொள்வது என்பது தேசிய முன்னணி தலைமைத்துவத்தின் முடிவு அல்லது  அந்த கூட்டணியில் உள்ள மஇகா உள்ளிட்ட மற்ற உறுப்பியக் கட்சிகளின் முடிவு. அதில் கருத்து சொல்ல நமக்கு உரிமை கிடையாது. அந்த முடிவில் தலையிடுவதும் நமது நோக்கம் அல்ல!

ஆனால் துணைப் பிரதமரின் கருத்தை தொடர்ந்து நூசாந்தாரா ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரும், பல்கலைக்கழக பேராசிரியருமான டாக்டர் அஸ்மி ஹாசான் என்பவர் நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றார். அதன்படி மஇகா இந்திய வாக்குகளைக் கவருவதில் பலவீனப்பட்டு இருப்பதால், மைபிபிபி கட்சி தேசிய முன்னணியில் சேர்த்துக் கொள்ளப்படலாம் என அவர் கருத்து கூறியிருக்கிறார்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், அரசியல் ஆய்வாளர்கள், போன்றவர்களின்  அறிவாற்றலுக்கும், மக்களிடையே ஒரு கருத்து உருவாக்கத்தை உருவாக்குவதில் அவர்கள் ஆற்றும் பங்கையும் நாங்கள் மதிக்கிறோம். வரவேற்கிறோம். அவர்களையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், அதே சமயத்தில் அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல! களத்தில் நின்று இந்திய வாக்காளர்களை சந்திப்பவர்கள் அல்ல! என்பதையும் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

அதிலும் குறிப்பாக இந்தக் கருத்தைக் கூறியிருக்கும் அஜிஸ் அசான் மலாய் இனத்தைச் சேர்ந்த பேராசிரியர். அவருக்கு இந்திய சமூகத்தைப் பற்றி இந்திய வாக்காளர்களை பற்றி எவ்வளவு தூரம் கள நிலவரமாகத் தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறிதான்.

அதிலும் மைபிபிபி கட்சி என்பது ஒரு பல இன கட்சி! இந்தியர் கட்சி அல்ல! மஇகாவுடன் ஒப்பிடும்போது அது மிகவும் சிறிய கட்சி. அதிலும் தற்போது அந்தக் கட்சி தலைமைத்துவ போராட்டத்தில் பிளவு பட்டு இருக்கிறது.  அதன் ஒரு பிரிவு உறுப்பினர்கள் நடப்பு தலைவர் எனக் கூறிக் கொள்ளும் டத்தோ லோகபாலன் பக்கமும் இன்னொரு பிரிவினர் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் பக்கமும் இரு அணிகளாகப் பிளவுபட்டு நிற்கின்றார்கள். அந்தக் கட்சியே பிளவு பட்டு இருக்கும் போது – அந்தக் கட்சி ஒரு பல இன கட்சி எனும் பட்சத்தில் – மஇகாவால் முடியாததை சாதிக்கும் விதமாக அந்தக் கட்சி மட்டும் எவ்வாறு இந்திய வாக்குகளை கவர முடியும் என்பது எங்களுக்கு புரியவில்லை.

உண்மையில் இந்திய வாக்குகளைக் கவருவதில் பலவீனப்பட்டு இருப்பது மஇகா அல்ல. மஇகா எப்போதுமே இந்திய சமூகத்தில் ஆதரவுத் தளத்தில் வலிமையாகத்தான் திகழ்ந்து வருகிறது. தற்போது இந்திய வாக்குகளை கவருவதில் தற்போது மிகவும் பலவீனப்பட்டு இருப்பது  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம்தான்.  இந்திய சமூகத்திற்கு வழங்கிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் – இந்திய சமூகத்திற்கு  இதுவரையில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை, திட்டங்களை கொண்டு வராமல் இந்தியர் வாக்குகள் மட்டும் வேண்டும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

அவ்வாறு ஒற்றுமை அரசாங்கம் எதையுமே இந்திய சமுதாயத்திற்கு செய்யாமல் இருக்கும் நிலையில், இந்திய வாக்குகள் கிடைக்காத போது மட்டும் மஇகாவை மட்டும் குறை சொல்வது நியாயமா?  இந்தியர் வாக்குகள் என்று வரும்போது மட்டும் மஇகா வேண்டும்?  ஆனால் அரசாங்கத்தில் ஏதாவது ஒரு வகையில் கூட மஇகாவுக்கு பங்களிப்பதில்லை. வாய்ப்புகள் வழங்குவதில்லை!

சரி! மஇகா வேண்டாம்! நீங்களாவது, ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ளவர்களாவது  இந்திய வாக்குகளைக் கவர்வதற்கு ஏதாவது முன்னெடுப்பு செய்கிறீர்கள் என்றால் அதுவும் இல்லை!

மஇகாவை விட எங்களுக்குத்தான் அதிகமான இந்திய உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என அடிக்கடி மார்தட்டிக் கொள்ளும் பிகேஆர் கட்சியினர் கூட நேரடியாக களமிறங்கி இந்தியர் வாக்குகளை கவரலாமே! ஏன் செய்யவில்லை?

அமைச்சராகவும், துணையமைச்சராகவும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களாகவும் ஜசெகவில் உள்ள இந்தியத் தலைவர்கள் களமிறங்கி இந்திய வாக்குகளைக் கவரலாமே!

அவ்வாறு செய்வதை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் இந்திய வாக்குகளை கவர்வதில் மஇகா பலவீனப்பட்டு இருப்பதாக அரசியல் தெரியாத அரசியல் ஆய்வாளர்கள் மஇகாவை குறை சொல்வதும் சிறுமைப்படுத்துவதும்  நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும்.

இந்திய சமூகத்தில் நிலவும் உண்மை நிலவரம் தெரியாமல் இந்திய சமூக வாக்காளர்களின் எண்ண ஓட்டங்கள், கள நிலவரங்கள் அறியாமல் அவர்கள் ஏன் ஒரு கட்சிக்கு வாக்களிக்க மறுக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாமல் அவர்கள் வாக்குகளைக் கவர்வதில் மஇகா பலவீனமாக இருக்கிறது என்று கூறுவதை அரசியல் ஆய்வாளர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.