Home நாடு அல்தான்துயா கொலையாளி அசிலா ஹாட்ரிக்கு மரண தண்டனை இல்லை! 40 ஆண்டுகள் சிறை!

அல்தான்துயா கொலையாளி அசிலா ஹாட்ரிக்கு மரண தண்டனை இல்லை! 40 ஆண்டுகள் சிறை!

174
0
SHARE
Ad
கொலை செய்யப்பட்ட அல்தான்துயா ஷாரிபு

புத்ரா ஜெயா: மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் கொலையாளிக்கு மரண தண்டனைக்குப் பதிலாக நாற்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தீர்ப்பு நியாயமானது- ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று ஷாரிபு குடும்பத்தின் வழக்கறிஞர் சங்கீத் கவுர் தியோ கூறினார்.

அல்தான் துயா தந்தை ஷாரிப் சேதேவ்

“கொலையுண்ட பெண்ணின் தந்தை ஷாரிபு சேதேவ் மனித வாழ்க்கையின் புனிதத்தில் வலுவான நம்பிக்கை கொண்டவர். அசிலா ஹாட்ரியின் மரண தண்டனையை சிறைவாசத்துடன் மாற்றிக் கொள்வதற்கு ஆதரவாக அல்தான்துயா தந்தை ஆகஸ்ட் மாதம் கடிதம் அனுப்பினார். பின்னர் அந்த கடிதத்தை மங்கோலியப் பெண்ணைக் கொலை செய்த குற்றவாளியான  முன்னாள் காவல்துறை பாதுகாப்புத் துறை வீரர் (கமாண்டோ) அசிலா ஹாட்ரியின் வழக்கறிஞர்களுடன் பகிர்ந்து கொண்டேன்” என வழக்கறிஞர் சங்கீத் கவுர் கூறினார்.

2006 இல் கொலை செய்யப்பட்ட அல்தான்துயா

#TamilSchoolmychoice

கூட்டரசு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 10) அசிலாவின் மரண தண்டனையை 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் கொண்ட தண்டனையாக மாற்றியது.

அல்தான்துயாவின் குடும்பத்தினர் மரண தண்டனையை ஏற்கவில்லை என்றும்  வழக்கறிஞர் சங்கீத் கூறினார். “வாழ்க்கையின் புனிதத்தன்மையின் மீதான அவரது (ஷாரிபுவின்) ஆழ்ந்த மரியாதை, அசிலாவின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான அவரது ஆதரவிற்கான காரணம்” என்றும் சங்கீத் தெரிவித்தார்.

அசிலா ஹாட்ரி

கூட்டரசு நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அசிலாவின் வழக்கறிஞர் குல்தீப் குமார், நீதிமன்ற முடிவில் அசிலா நிம்மதி அடைந்ததாகக் கூறினார்.

மரண தண்டனை மறுஆய்வுக்காகப் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடமிருந்து ஒரு குற்றவாளிக்கு இதுபோன்ற ஆதரவுக் கடிதம் கிடைத்திருப்பது இதுவே  முதல் முறையாகும் என்றும் வழக்கறிஞர் குல்தீப் தெரிவித்தார்.

நவம்பர் 1, 2006 அன்று கைது செய்யப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்பட்டதில் அசிலா தனது சிறைத்தண்டனையை 2034 இல், சிறைத்தண்டனைக் கால குறைப்பு சலுகைகளுக்குப் பின்னர் முடித்துவிடுவார் என்று குல்தீப் கூறினார்.

28 வயதான அல்தான்துயா, 2006 அக்டோபரில் சிலாங்கூரில் உள்ள ஷா ஆலமில் ஆள்நடமாட்டமற்ற ஒரு வெறிச்சோடிய பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். அவர் இராணுவத் தர வெடிகுண்டுகளால் தகர்த்துக் கொல்லப்பட்டார் என ஆய்வுகள் தெரிவித்தன.

ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும் சிருல் அசார்

ஏப்ரல் 2009 இல், ஷா ஆலம் உயர் நீதிமன்றம், அசிலா, 48, மற்றும் சக போலீஸ் கமாண்டோ சிருல் அசார் உமர் ஆகியோர் அல்தான்துயாவின் கொலையில் குற்றவாளிகள் எனக் கண்டறிந்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.

மேல்முறையீட்டில் இருவரையும் விடுவித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம். எனினும் அரசு தரப்பு கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டுக்காக காத்திருந்த சமயத்தில் ஒரு குற்றவாளியான சிருல் ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தார்.

அவர்களின் மரண தண்டனையை 2015 இல் கூட்டரசு நீதிமன்றம் மீண்டும் நிலைநிறுத்தியது.

ஆஸ்திரேலிய சுற்றுலா குடிநுழைவு அனுமதி (விசா) வழங்கப்பட்ட  காலகட்டத்திற்கு மேல் தங்கியதற்காக, ஆஸ்திரேலிய அதிகாரிகள் சிருலை கைது செய்தனர். மரண தண்டனையை எதிர்கொள்ளும் நபர்களை அவர்கள் பிறந்த நாட்டில் நாடு கடத்தக் கூடாது என்ற கொள்கை ஆஸ்திரேலியாவில் உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில், 52 வயதான சிருல் குடிவரவு தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் இன்னும் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.

அவர் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவாரா அல்லது அசிலாவின் 40 ஆண்டுகால சிறைத்தண்டனை மாற்றத்தைத் தொடர்ந்து மீண்டும் மலேசியாவுக்குக் கொண்டுவரப்படுவாரா என்பது இன்னும் தெரியவில்லை.