கோலாலம்பூர்: தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் பிரச்சனை ஒருவழியாக சுமுகமாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையிலேயே 4,000 சதுர அடி அளவுள்ள மாற்று இடம் அடையாளம் காணப்பட்டு ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்திற்கான நிலப்பட்டாவையும் மாநகர் மன்றம் வழங்கியுள்ளது.
ஆலய நிர்வாகமும் அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு ஆலயத்தை இடம் மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இன்று ஆலய நிர்வாகத்தினருக்கு புதிய மாற்று இடத்திற்கான ஆவணங்களை மாநகர் மன்றத் தலைவர் (மேயர்) டத்தோஸ்ரீ சரவணன், ஒற்றுமைத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.
இதற்கிடையில் இன்று (செவ்வாய்க்கிழமை மார்ச் 25) இரவு 8.30 மணிக்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் ஆலய வளாகத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ஆலயப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துள்ளதையும் அதற்கான விவரங்களையும் தெரிவித்தார். கோபிந்த் சிங்குடன் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், துணையமைச்சர் எம்.குலசேகரன் ஆகியோரும் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.