லண்டன், மார் 5 – இங்கிலாந்தில் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் மண்டேலாவுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரதமர் டேவிட் கேமரூன், இளவரசர் ஹாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தென் ஆப்ரிக்காவின் தேச தந்தை என போற்றப்படும் நெல்சன் மண்டேலா அந்நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி அவர் தென் ஆப்ரிக்காவில் உயிரிழந்தார்.
அவரது இறுதி சடங்கில் உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நூற்றாண்டிலேயே நடைபெற்ற மிகப் பெரிய இறுதி சடங்காக அது வர்ணிக்கப்பட்டது. மேலும் இனவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலாவின் நினைவை போற்றும் வகையில் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெஸ்ட் மினிஸ்டர் என்ற இடத்தில் நெல்சன் மண்டேலாவின் நினைவை போற்றும் வகையிலும், அவரது நிறவெறி எதிர்ப்பு கொள்கையை பறை சாற்றும் வகையிலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நெல்சன் மண்டேலாவின் மகள் தேஸ்மாண்ட் டுடு கலந்து கொண்டார்.
மேலும் தென் ஆப்ரிக்க துணை அதிபர் கலிமா போட்லாந்தே, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இளவரசர் ஹாரி உள்பட 2000-க்கும் அதிகமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கடந்த 1970-ஆம் ஆண்டு நிறவெறிக்கு எதிராக இங்கிலாந்து எம்பிக்கள் சிலர் குரல் கொடுத்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனவெறிக்கு எதிராக இங்கிலாந்து தொடர்ந்து குரல் கொடுத்து வருவது வரவேற்கத்தக்கது என்று தேஸ்மாண்ட் டுடு கூறினார்.