நியூயார்க், ஏப்ரல் 12 – அமெரிக்க முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் மீது பெண் ஒருவர் செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ் வேகாஸ் மாகாணத்தில் உள்ள மண்டாலே பே ஆடம்பர விடுதியில் ஸ்க்ராப் மறுசுழற்சி நிறுவனங்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஹிலாரி கிளின்டன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
அதில் ஹிலாரி பேசிக் கொண்டிருக்கும் பொழுது பார்வையாளர் வரிசையில் இருந்த பெண் ஒருவர், திடீரென தனது செருப்பை, ஹிலாரி மீது வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த அமெரிக்க பாதுகாப்பு வீரர்கள் மற்றும் விடுதி பாதுகாவலர்கள் விரைந்து சென்று அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். பெண் செருப்பு வீசியதும், ஹிலாரி சட்டென்று விலகினார். எனினும் பதற்றம் அடையாமல் தொடர்ந்து உரை நிகழ்த்தினார்.
செருப்பு வீசிய அந்தப் பெண்ணை கைது செய்து ரகசிய இடத்தில் விசாரித்து வருகிறோம் என்று அமெரிக்க உளவு துறை செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் ஓகில்வி தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த 2008-ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், ஒரு நிகழ்ச்சியில் பேசி கொண்டிருந்த போது ஈராக் பத்திரிகையாளர் முந்தாதர் அல் ஜைதி என்பவர் காலணி வீசி தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.