Home நாடு பக்காத்தானுக்கு ஆதரவு தர மறுத்த பாஸ் -அரசியல் ஆய்வாளர்களின் கருத்து என்ன?

பக்காத்தானுக்கு ஆதரவு தர மறுத்த பாஸ் -அரசியல் ஆய்வாளர்களின் கருத்து என்ன?

485
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 23 – பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பக்காத்தானை ஆதரிக்க இயலாது என பாஸ் கட்சி அறிவித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பக்காத்தானை ஆதரிக்க மறுத்தால் பாஸ் கட்சி இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என அரசியல் ஆய்வாளர் டாக்டர் பிரிகெட் வெல்ஷ் தெரிவித்துள்ளதாக ‘தி மலேசியன் இன்சைடர்’ இணையதளம் தெரிவித்துள்ளது.

bridgetwelsh_DSC_0174_b

#TamilSchoolmychoice

தாய்வான் தேசிய பல்கலைக்கழகத்தில் மூத்த ஆய்வாளராக உள்ள இவர், பக்காத்தானுக்கு எதிரான கீழறுப்பு வேலைகளில் பாஸ் ஈடுபட்டால் அது நிச்சயம் மறக்கப்பட மாட்டாது என்றும் எச்சரித்துள்ளார்.

“பினாங்கிலோ அல்லது மற்ற பகுதிகளிலோ பக்காத்தான் வெற்றி பெறலாம் எனும் நம்பிக்கைக்கு அக்கட்சி எளிதில் விடைகொடுத்து அனுப்பலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் அக்கட்சிக்குத்தான் இழப்பு ஏற்படும். மலாய் இளைஞர்களின் ஆதரவை இழப்பதுடன், பாஸ் மீதான நம்பிக்கையும் சிதைந்து போகும்.

“மேலும் அன்வார் சிறை செல்ல காரணமாகக் கருதப்படும் தேசிய முன்னணியுடன் பாஸ் கட்சி இணைந்து செயல்படுவது போன்ற தோற்றமும் ஏற்படும். இது அக்கட்சியின் நிலைமையை மேலும் மோசமாக்கும்,” என்கிறார் பிரிகெட் வெல்ஷ்.

“பக்காத்தானுக்கு இந்த இடைத்தேர்தலில் கைகொடுக்காததன் மூலம் பாஸ் கட்சியானது அன்வார் மீதான அரசாங்கத்தின் நடவடிக்கையை பாஸ் ஆதரிப்பது தெளிவாகிறது” என்று குறிப்பிட்டுள்ள அவர், ஹுடுட் விவகாரமே பக்காத்தானில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

“எனினும் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் தனித்து நிற்பது என்ற பாஸ் கட்சியின் முடிவும் எதிர்க்கட்சி கூட்டணியில் பிரச்சினை ஏற்பட காரணம் என்பதை மறுப்பதற்கில்லை,” என்று பிரிகெட் வெல்ஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பாஸ் கட்சி கீழறுப்பு வேலைகளில் ஈடுபடவில்லை எனில் பிகேஆர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி” என மற்றொரு அரசியல் ஆய்வாளரான டாக்டர் ஜேம்ஸ் சின் கூறியுள்ளார்.

“இடைத்தேர்தலில் பிகேஆர் வெற்றி பெறுவது உறுதி. வாக்களிப்போரின் எண்ணிக்கையை பொறுத்து வெற்றி பெரும்பான்மைக்கான இடைவெளி சற்றே குறையக்கூடும்.”

“இடைத்தேர்தலில் வெற்றி பெற பிகேஆர் மற்றும் ஐசெக இடையேயான ஒத்துழைப்பே போதுமானது. எனினும் பாஸ் தொடர்ந்து கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டால் வாக்கு விகிதங்களில் மாற்றங்கள் ஏற்படலாம்,” என்று டாஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவர் தெரிவித்துள்ளார்.