கோலாலம்பூர், ஜூலை 9 – 1எம்டிபி நிதியில், 700 மில்லியன் அமெரிக்க டாலர் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்கிற்கு, சென்றுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை குற்றம்சாட்டியுள்ள நிலையில், ஊழலுக்கு எதிரான ஓர் அனைத்துலகக் கருத்தரங்கில் நஜிப் துன் ரசாக் விரைவில் பேசவுள்ளது அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.
புத்ராஜெயாவில் வரும் செப்டம்பர் மாதம் 2-ம் தேதியில் இருந்து 4-ம் தேதி வரையில் நடைபெறவுள்ள, 16-வது அனைத்துலக ஊழல் ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றவுள்ள முக்கியப் பிரமுகர்களில் நஜிப்பும் ஒருவர்.
“தண்டனைகளை முடிவுக்குக் கொண்டு வருதல்: மக்கள். நேர்மை. செயல்பாடுகள்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெறவுள்ள அம்மாநாட்டில் சுமார் 800 அனைத்துலகப் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு, ஊழலுக்கு எதிராகக் கருத்தரங்குகளையும், விவாதங்களையும் நடத்தவுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), டிஐ-எம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், பிரதமருடன், துணைப் பிரதமர் மொகிதின் யாசின், பிரதமர்த் துறை அமைச்சர் பால் லாவ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அபு காசிம் முகமட் மற்றும் டிரான்ஸ்பரன்சி இண்டர்நேசனல் மலேசியா நிறுவனத்தின் தலைவர் அக்பர் சத்தார் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.
இவர்கள் தவிர ஆப்பிரிக்கா, கிரீஸ், ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.