புதுடில்லி, ஜூலை 10- வங்கிகளில் வாங்கிய கடன் தொகையான ரூ 7000 கோடியை கிங்ஃபிஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையா வேண்டுமென்றே திருப்பிச் செலுத்த மறுக்கிறார். எனவே அவரைக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவராக அறிவிப்பதோடு, சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம், வங்கிகளுக்கு மல்லையா 7 ஆயிரம் கோடி ரூபாய்க் கடன் பாக்கி வைத்துள்ளார். அவரிடம் பணம் இருந்தும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்.எனவே, மல்லையாவை வேண்டுமென்றே கடனைக் கட்டத் தவறியவர் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும்” என்றார்.
மேலும், அரசு அதிகாரிகளுக்கும், பெரிய நிறுவனங்களுக்கும் இடையே இரகசியக் கூட்டு இருப்பதாகவும், இதனால் வங்கிகளின் வாராக்கடன் மாதத்துக்கு மாதம் அதிகரித்து 3 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, மல்லையாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வலியுறுத்தி வருகிற 20-ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த வங்கி ஊழியர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.