கோலாலம்பூர், ஜூலை 14 – மாயமான எம்எச் 370 விமானத்தை தேடும் நடவடிக்கைக்காக இதுவரை 422 மில்லியன் ரிங்கிட் செலவாகியுள்ளது. இச்செலவை மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய மூன்று நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
எனினும் விமானப் பயணிகளின் குடும்பத்தாருக்கு செய்யப்பட்ட உதவிகள் இதில் சேர்க்கப்படவில்லை என அனைத்துலக விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமைச் செயலர் ரேய்மான்ட் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். இது ஐ.நா. பேரவையில் உள்ளடங்கிய அமைப்பாகும்.
“மலேசிய விமானம் மாயமானது புரியாத புதிராக உள்ளது. விமானிகளின் அறையில் என்ன நடந்தது என்பது நமக்கு துல்லியமாகத் தெரியாது. இது பாதுகாப்பு குறைபாடுடன் தொடர்புடைய விஷயமா என்பதும் தெரியவில்லை. எந்தவொரு விமானமும் விபத்துக்கு முன்னர் இவ்வாறு தொடர்ந்து ஏழு மணி நேரம் பறந்ததில்லை,” என்று த ஸ்டிரெய்ட் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பெஞ்சமின் கூறியுள்ளார்.
ஒரே மாதிரியான விமான விபத்துக்கள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டுமானால், விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டியது அவசியம் என்றார் அவர்.
“ஆனால் விமானம் எங்கு விழுந்து நொறுங்கியது என்பது குறித்து துல்லியமான தகவல்கள் இல்லை. மேலும் அனுமானத்தின் பேரில் தேடப்படும் பகுதியிலும் கடல் கொந்தளிப்பு, வீசும் பெருங்காற்று காரணமாக தேடுதல் நடவடிக்கை பாதிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் விமானத்தை தேடும் பணி நிறுத்தப்படும் என நான் கருதவில்லை. விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் இப்பணி தொடர வேண்டும். இது சம்பந்தப்பட்ட 3 நாடுகளின் பொறுப்பும் கூட,” என்று பெஞ்சமின் மேலும் தெரிவித்துள்ளார்.