மைசூர், ஆகஸ்ட் 5- துரித உணவான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாகக் காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்ததையடுத்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மேகியில் அளவுக்கு அதிகமான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது உறுதியானதால், மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களுக்கு மத்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது.
இத்தடையை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
மேகி நூடுல்ஸ்க்கான தடை நீங்குமா? நீடிக்குமா? என ஆகஸ்டு 3-ஆம் தேதி மாலை தெரிய வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், மும்பை நீதிமன்றம் அதற்கான தீர்ப்பை அன்று வெளியிடவில்லை. வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
இந்நிலையில், “மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதால் எந்தப் பாதிப்பும் இல்லை; அது பாதுகாப்பான உணவு தான்” என உணவுப் பாதுகாப்புத் தர நிர்ண ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
மைசூரில் உள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CFTRAI) 5 விதமான மேகி நூடுல்ஸ் மாதிரிகளை ஆய்வு செய்து, உணவுப் பாதுகாப்பு 2011- ன் விதிகள் அனுமதித்துள்ள அளவுடன் மேகி நூடுல்ஸில் சேர்க்கப்பட்டுள்ள கலவைகள் ஒத்துப் போவதாகத் தெரிவித்துள்ளது.
நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஒரு ஆபத்தும் இல்லை என உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளதால், மும்பை உயர்நீதிமனத்தின் தீர்ப்பும் அதற்குச் சாதகமாகவே அமைய வாய்ப்பிருக்கிறது. எனவே, மேகி நூடுல்ஸ்க்கான தடை நீங்கி, மீண்டும் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது.
இதுவரை ஒரே வழக்கில் நீதிமன்றத்தில் இரு வேறு தீர்ப்புகள் வெளியாகி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியதைத் தான் பார்த்திருக்கிறோம். இப்போதோ ஒரே ஆய்வில் இருவேறு முடிவுகள் வெளியாகி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தவுள்ளன.