நியூயார்க் – அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை காணொளி மூலம் வரவேற்பு அளித்துள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபையில் ‘2030–ம் ஆண்டில் நிலைக்கத் தக்க வளர்ச்சி‘ என்னும் தலைப்பில் உச்சி மாநாடு நடைபெறுகிறது.இதில் கலந்து கொண்டு மோடி நாளை உரையாற்றவிருக்கிறார்.
இந்நிலையில் அவருக்குக் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை காணொளி மூலம் வரவேற்பு தெரிவித்துள்ளார். அந்தக் காணொளி தற்போது யூடியூப்பில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “கூகுள் நிறுவனத்திற்கு உங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். சான் ஜோசில் உங்களின் கருத்துக்களைக் கேட்க ஆர்வமாக இருக்கிறோம். இந்தியாவுக்கும் சிலிக்கான் வேலிக்குமான பந்தம் மிக வலிமையானது. தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் வல்லுநர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கே உற்பத்தியாகும் பொருட்கள் இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த மாணவர்களால் உருவாக்கப்பட்டவை. திறமையான தொழில்நுட்ப நிறுவனங்களை ஏற்றுமதி செய்த பெருமை இந்தியாவிற்கு உண்டு.
தற்போது இந்தியாவே புதிய தொழில்நுட்பப் புரட்சிக்குத் தயாராகி வருகிறது.பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் தான் அந்தப் புரட்சி” என்று கூறியுள்ளார்.