Home நாடு தமிழாசிரியர் விருதுகள் பெற்றவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் வெகுமதி – செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழாசிரியர் விருதுகள் பெற்றவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் வெகுமதி – செங்கோட்டையன் அறிவிப்பு

1423
0
SHARE
Ad

teachers-awards-02112017-feat-sengottayan-featureகோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் நாட்டின் பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழாசிரியர் திலகம் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 5 இலட்சம் ரூபாய் வெகுமதி இந்திய மண்ணில் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

தமிழக அரசாங்கம் தமிழ் மொழிக்கும், வெளிநாடுகளில் தமிழ்க் கல்விக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் என்றும் தனதுரையில்  குறிப்பிட்ட செங்கோட்டையன், முதல் கட்டமாக மலேசிய நூலகங்களுக்கு 5 ஆயிரம் நூல்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

teachers-awards-sengottayan-02112017 (1)தமிழாசிரியர் திலகம் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகத்திலிருந்து சிறப்பு வருகை புரிந்த செங்கோட்டையன், தனது உரையில் யாழ்ப்பாணம் நகரிலுள்ள தமிழ் நூலகங்களுக்கு 1 இலட்சம் நூல்கள் டிசம்பருக்குள் வழங்கப்பட தமிழக அரசு ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். போரினால் அழிந்த யாழ் நூலகங்களை மறு சீரமைப்பு செய்யும் முயற்சிகளில் தமிழக அரசு தனது பங்களிப்பை வழங்கும் என்றும் செங்கோட்டையன் உறுதியளித்தார்.

#TamilSchoolmychoice

teachers-awards-sengottayan-02112017 (2)மேலும், தமிழ் பாடத்திற்கான பாடத் திட்ட அமைப்புக்கான நூல் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அந்த நூல் ஜனவரி மாத வாக்கில் தயாரானவுடன் “எத்தனை நூல்கள் உங்களுக்கு வேண்டும் என்று தெரிவியுங்கள். அத்தனை நூல்களையும் அனுப்பி வைக்கிறோம்” என பலத்த கைத்தட்டல்களுக்கிடையில் செங்கோட்டையன் கூறினார்.

தமிழக அரசில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக அனைவரும் பாராட்டும் வகையில்  பல்வேறு மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு வரும் செங்கோட்டையன், மலேசியாவுக்கு வருகை தந்து இன்று நடைபெற்ற தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் விழாவில் உரையாற்றும்போது மலேசியர்களை மகிழ்விக்கும் வகையில் மேற்கண்ட அறிவிப்புகளைச் செய்தார்.

teachers-awards-sengottayan-02112017 (7)மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க் கல்வி தொடர்ந்தாலும், தமிழக அரசாங்கம் இதுவரையில் மலேசியாவில் தமிழ்க் கல்வி மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும், நேரடியாகவோ, மறைமுகவாகவோ எந்தவித உதவிகளையும் வழங்கியதில்லை.

செங்கோட்டையனின் இந்த அறிவிப்புகள் இத்தகைய உதவிகளை முதன் முறையாக மலேசியத் தமிழ்க் கல்வி மேம்பாட்டுக்காக வழங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பதோடு, புதிய வகையிலான இருவழி உறவுப் பாலத்தை கல்வித் துறையில் திறந்து வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மேலும் பல்வேறு நிலையிலான இருவழி நல்லுறவுகள், ஒத்துழைப்புகள் மேலும் மேலோங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

-செல்லியல் தொகுப்பு